ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு இக்கட்சியின் தலைவராக உள்ளார்.
நெல்லூர் மாவட்டம் கந்துகூர் என்ற இடத்தில் தெலுங்கு தேச கட்சிப் பொதுக்கூட்டம் நடந்தபோது அங்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
சந்திரபாபு நாயுடு வாகனம் ஒன்றின் மேல் நின்றவாறு பேசிக்கொண்டிருந்தார்.
கூட்டம் முடிந்த நிலையில் அதில் பங்கேற்ற பொதுமக்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆர்வ மிகுதியில் தொண்டர்கள் சிலர் சந்திரபாபு நாயுடு இருந்த வாகனத்தின் அருகில் செல்ல முயன்றதால் கூட்டத்தினரிடையே முட்டி மோதுதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்த 8 பேர் மாண்டதாக நம்பப்படுகிறது.
பலர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தோர் நெல்லூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சம்பவம் எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நடந்த சம்பவம் குறித்து தமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, பலியானோரின் குடும்பத்திற்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தீவிர அரசியல் செய்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. மீண்டும் ஆந்திராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என அதிரடியாக இறங்கியுள்ளார் அவர்.
இதற்கிடையே, இந்த அசம்பாவிதம் அவருக்குப் பின்னடைவாக அமையலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.