மலேசியாவுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது.
மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பு மீண்டும் தலைதூக்
காமல் இருக்க தனது அனைத்துலக விமான நிலையங்கள், நிலம்வழி சோதனைச்சாவடிகள் ஆகியவற்றில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மலேசியா முடுக்கிவிடுகிறது.
சீனாவில் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்
டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வரும் விமானங்களில் உள்ள கழிவுநீர் சோதிக்கப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
விமானத்தில் உள்ள கழிவுநீர் தேசிய பொதுச் சுகாதார
ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு 'பொலிமரேஸ் செயின் ரியாக்ஷன்' முறைப்படி சோதிக்கப்படும். அதன்மூலம் விமானத்தில் இருந்த பயணி
களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உள்ளதா என்று
தெரிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சீனா உட்பட, வெளிநாடு
களிலிருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்படும்.
காய்ச்சல் அல்லது அதற்கான அறிகுறிகளுடன் இருக்கும்
பயணிகள் தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்
படுவர். அங்கு அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். சந்தேகம் எழுந்தால் அவர்
களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்," என்று மலேசிய சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா நேற்று தெரிவித்தார்.
"புதிய உருமாறிய கொவிட்-19 வகை, அனைத்து வகை சளிக்காய்ச்சல், கடுமையான சுவாசத் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரைக் கண்டுபிடிக்கும் முறையை மேம்படுத்த கடந்த 14 நாள்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டவர்கள் அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்டபில் இருந்தோருக்கு ஆண்டிஜன் விரைவுப் பரிசோதனை நடத்தப்படும். கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஜெனோம் சீக்குவன்சிங் எனப்படும் முழு மரபணு வடிவமைப்பை கண்டறியும் பரிசோதனை நடத்தப்படும்.
கொவிட்-19 அறவே இல்லாத நிலையை இலக்காகக் கொண்டிருந்த சீனா அண்மையில் அதன் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
இதையடுத்து, அங்கு கிருமிப் பரவல் மோசமடைந்து பலர் நோய்வாய்ப்பட்டனர். நீண்டகாலமாக முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் இன்னும் பலர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததாலும் சீனாவில் பலருக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக அங்கு மரண எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 11ஆம் தேதியி
லிருந்து 17ஆம் தேதிவரை சீனாவில் புதிதாக 148,659 பேருக்குப் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் மேலும் 442 பேர் மாண்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் வழங்கிய அதிகார
பூர்வத் தரவுகளை அடிப்படை
யாகக் கொண்டு மலேசிய சுகாதார அமைச்சு கூறியது.
இதன் விளைவாக சீனாவிலிருந்து வரும் விமானங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது அனைத்துலக எல்லைகளை மீண்டும் திறக்க சீனா முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து மலேசியாவுக்கு வரும் விமானங்கள் அதிகரிக்கும் என்று மலேசியப் போக்கு
வரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையே, சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வரும் நிலையில், அதன் விளைவாக உலகெங்கும் பல இடங்களிலும் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் நடத்தப்படுகிறது.
இதற்கு சீனா அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.
உலக நாடுகளின் இச்செயல் சீனாவுக்கு எதிரான பாரபட்சமிக்கது என்று சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் சாடியுள்ளது. கொவிட்-19 பாதிப்பு குறித்த உண்மை நிலவரம் தொடர்பாக சீனா போதுமான தகவல்களை வெளியிடாததால் உலக நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

