புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் லீ: துணிவு உள்ளோருக்கே இருளிலும் நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படும்
புத்தாண்டில் கூடுதலான சோதனைத் தருணங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் சிங்கப்பூரர்கள் ஒன்றுபட்டு வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
மிக மோசமான சூழ்நிலைகளிலும் நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுவதுண்டு. ஆனால், அது வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளும் துணிவுடையோருக்கு மட்டுமே தென்படும் என்றார் அவர்.
சிங்கப்பூர் கிருமிப் பரவலைப் பாதுகாப்பாகக் கடந்துவந்து, மேலும் வலிமையுடன் மீண்டெழுந்துள்ளது. சிங்கப்பூரின் கொவிட்-19 அணுகுமுறை, உலக அரங்கில் நாட்டிற்கு நன்மதிப்பையும் நற்பெயரையும் மெருகேற்றியுள்ளது என்றார் அவர். பிரதமர் லீ நாட்டு மக்களுக்கு விடுத்த புத்தாண்டுச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலான நிறுவனங்களும் தனிநபர்களும் சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் தொழில் தொடங்க விரும்பும் நிலையில், சிங்கப்பூர் மீது அதிக ஆர்வம் காட்டப்படுவதாக அவர் கூறினார்.
"இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நம்பிக்கை அளிக்கும் முதலீடுகளையும் திறன்மிக்க வெளிநாட்டினரையும் சிங்கப்பூருக்கு வரவேற்கும் அதேவேளையில், சிங்கப்பூரர்களின் திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும். வட்டாரம், உலகம் எனப் புதிய இடங்களை நாடிச் சென்று நமது கனவுகளை நனவாக்கவேண்டும்," என்று பிரதமர் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டில் நாம் நன்றி செலுத்த நிறைய தருணங்கள் இருந்தன. கிருமிப் பரவலுக்கு எதிரான ஈராண்டுப் போராட்டத்தின் பிறகு வழக்கநிலை திரும்பத் தொடங்கியது, கிருமிப் பரவலுக்குப் பின்னர் முழுமையான தேசிய தின அணிவகுப்பை நடத்தியது, சிங்கப்பூரர்கள் மீண்டும் பண்டிகைகளைக் கொண்டாடவும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உள்ளூரிலும் வெளியூரிலும் ஒன்றிணையவும் சாத்தியமானது போன்றவற்றைப் பிரதமர் சுட்டினார்.
அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது சாங்கி விமான நிலையம் உயிரோட்டத்துடன் செயல்படுவதைக் கண்டு மகிழ்ந்ததாகக் கூறிய அவர், சிங்கப்பூரின் மீட்சி விமான நிலையம், விமான நிறுவனம் ஆகியவற்றோடு ஹோட்டல்கள், கடைகள், உணவு பானத் துறை, சேவைத் துறை ஆகியவற்றுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"ஷங்ரிலா உரையாடல், புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கு, "எஃப்1" இரவு நேரக் கார்ப் பந்தயம் உள்ளிட்ட நேரடி நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதை உலகுக்கு உணர்த்தியுள்ளன. இருப்பினும் அனைவரும் இருதிறன் கொண்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை வலுவாக ஊக்குவிக்கிறேன்," என்றார் திரு லீ.
அனைத்துலகப் பயணங்களும் சீனாவில் பாதிப்பும் உயரும்வேளையில், நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து பின்னர் இறுதிக்கட்டமாக எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் தொடர்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் தணிந்தபாடில்லை.
இந்நிலையில் நிச்சயமற்றதன்மையை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என்றார் திரு லீ.
வர்த்தக, தொழில் அமைச்சு அடுத்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 0.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்று முன்னுரைத்துள்ளதை அவர் சுட்டினார்.
பொருள், சேவை வரி உயர்வின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் உதவுகிறது. சென்ற மாதம் ஏறக்குறைய மூன்று மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $700 ரொக்கம் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர் உதவிகள் தொடரும் என்றார்.இந்த வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு செலவிடப்படுமென்றார் திரு லீ.
வீடமைப்பு, குற்றவியல் சட்டத்தின் 377ஏ பிரிவை அகற்றியது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் பேசிய அவர், ஒன்றிணைந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
புத்தாண்டு வாழ்த்துகள்
பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்முரசு இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

