கொவிட்-19 தகவல் பகிர்வு தொடர்பில் சீனாவுக்கு வலியுறுத்து

கொவிட்-19 தகவல் பகிர்வு தொடர்பில் சீனாவுக்கு வலியுறுத்து

2 mins read

உலக சுகா­தார நிறு­வ­னம், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் குறித்த தக­வல்­களை உட­னுக்­கு­டன் பகிர்ந்­து­கொள்­ளும்­படி சீனா­வி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அதி­கா­ரி­கள் சீன அதி­கா­ரி­க­ளு­டன் நேற்று முன்­தி­னம் நடத்­திய சந்­திப்­பின்­போது இவ்­வாறு பகிர்­வ­தால் மற்ற நாடு­கள் அதற்­கேற்ப நட­வ­டிக்கை எடுக்க இது உத­வும் என்று எடுத்­துக்­கூ­றப்­பட்­டது.

அண்­மை­யில் சீனா­வில் அதி­க­ரித்­து­வ­ரும் கிரு­மிப் பர­வல் உல­கெங்­கும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நேற்று முன்­தி­னம் கிரு­மித் தொற்­றால் ஒரு­வர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து இது­வரை மொத்­தம் 5,248 பேர் பலி­யா­ன­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­கா­ர­பூர்வ தக­வ­லில் பாதிக்­கப்­பட்­டோர், உயி­ரி­ழந்­தோர் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கை குறை­வா­கவே காட்­டப்­படும் நிலை­யில் சீனா­வில் மருத்­து­வ­ம­னை­களும் பிண­வ­றை­களும் நிரம்பி வழி­வ­தா­கத் தெரி­வ­தால் சீன அர­சாங்­கம் வெளி­யி­டும் தக­வல்­கள் குறித்­துக் கேள்வி எழுந்­துள்­ளது.

கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் குறித்து கூடு­தல் விவ­ரங்­க­ளைப் பெறு­வ­தும் சீனா­விற்கு உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் நிபு­ணத்­துவ ஆத­ரவை வழங்­கு­வது குறித்­துத் தெரி­விப்­ப­தும் இந்த சந்­திப்­பின் நோக்­கங்­கள்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கையாள்­வது தொடர்­பான நாட்­டின் உத்­தி­க­ளை­யும் கிரு­மித் திரி­பு­க­ளைக் கண்­கா­ணித்­தல், தடுப்­பூசி, மருத்­து­வ­ம­னைப் பரா­ம­ரிப்பு, தொடர்பு, ஆய்வு, மேம்­பாடு ஆகி­யவை குறித்­தும் சீன அதி­கா­ரி­கள் பகிர்ந்­து­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றால் மருத்­து­வ­ம­னை­யில் உள்­ளோர், தீவிர சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வோர், உயி­ரி­ழந்­தோர் குறித்த தக­வல்­களை வழக்­க­மான இடை­வெ­ளி­யில் பகிர்ந்­து­கொள்­ளும்­படி அவர்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­ய­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

குறிப்­பாக எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­யோர், 60 வய­துக்­கு­மே­லா­னோர் ஆகிய பிரி­வி­ன­ருக்­குத் தடுப்­பூசி வழங்­கப்­பட்ட தக­வல்­களைப் பகி­ரும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

நிறு­வ­னத்­தின் தலை­மை­யி­லான கொவிட்-19 வல்­லு­நர் குழு­வில் இணைந்து அணுக்­க­மா­கச் செய­லாற்­றும்­ப­டி­ சீன விஞ்­ஞானி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டு உள்­ளது.

வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோர் இனி கட்­டா­யம் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை என்­றும் கிரு­மிப் பர­வல் தொடர்­பான கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கைவி­டப்­பட்­ட­தா­க­வும் சீனா அண்­மை­யில் தெரி­வித்­தது.

இருப்­பி­னும் உலக நாடு­கள் சில முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக, சீனா­வில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு கட்­டுப்­பாடு­களை விதித்­துள்­ளன.

சீனா­வில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு நேற்று முதல் கொவிட்-19 பரி­சோ­தனை அவ­சி­யம் என்று ஸ்பெ­யின் அறி­வித்­துள்­ளது. சீனா­வில் ஒரு­வேளை கிரு­மி­யின் புதிய திரிபு பர­வக்­கூடும் என்­ப­தால் விரைந்து செயல்­ப­டு­வது முக்­கி­யம் என்­பதை ஸ்பெ­யின் நாட்­டுச் சுகா­தார அமைச்சு சுட்­டி­யது.