கொவிட்-19 நிலவரம் பற்றி ஸி ஜின்பிங்: கடும் சவால்கள் காத்திருப்பதாக எச்சரிக்கை
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சீனா புதிய கட்டத்தில் நுழைந்து இருக்கிறது என்று அந்த நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார்.
கடுமையான சவால்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா கொரோனா கிருமியை அடியோடு துடைத்தொழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது.
ஆனால், இப்போது அந்தக் கொள்கையை அது கைவிட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாடளாவிய அளவில் தொற்று தாறுமாறாகக் கூடி இருக்கிறது.
அந்த நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்கும் பொரு ளியலுக்கும் பெரும் சோதனை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதன்முதலாக அதிபர் ஸி, வெளிப்படையாக கருத்துகளை வெளியிட்டார். "அறிவியலை அடிப்படையாகக் கொண்ட, குறிப்பிட்ட இலக்குகளுடன் செயல்படக்கூடிய அணுகுமுறையை சீனா கடைப்பிடிக்கிறது. பரிணமித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு கொவிட்-19 கிருமியை ஒடுக்க அந்த அணுகுமுறையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.
"இதன் மூலம் கூடுமானவரை மக்களின் உயிரையும் உடல்நலனையும் காப்பாற்றுகிறோம்," என்று வருடாந்திர புத்தாண்டுக்கு முதல் நாள் உரையில் அதிபர் ஸி சனிக்கிழமை தெரிவித்தார்.
சீனாவில் முற்றிலும் கொரோனா கிருமியைத் துடைத்தொழிக்கும் கொள்கை பற்றி அதிபர் ஸி வெள்ளிக்கிழமை முதன்முதலாக கருத்துரைத்தார். அரசாங்கம் கைகொள்ளும் உத்தி, மக்களின் உயிர்களைக் காப்பதிலும் பொருளியல் பாதிப்புகளைக் கூடுமானவரை குறைப்பதிலும் ஒருமித்த கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
சீனா கொரோனா கிருமியை முற்றிலும் துடைத்தொழிக்க வேண்டும் என்ற கொள்கையை கடந்த மூன்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வந்தது.
ஆனால், திடீரென அந்தக் கொள்கையிலிருந்து விலகியது. இதனால் நாட்டில் மளமளவென தொற்று கூடிவிட்டது.
"அசாதாரணமான முயற்சிகளுடன் நாங்கள் இதுவரை எதிர்நோக்காத சிரமங்களையும் சவால்களையும் சமாளித்து வருகிறோம். இது எல்லாருக்குமே எளிதான ஒன்றல்ல," என்று அதிபர் ஸி தெரிவித்தார்.
இப்படி அதிபர் ஸி கருத்துகளை வெளியிட்டு இருப்பதன் மூலம், சீனாவில் வேகமாக கிருமி பரவுவதன் காரணமாகவும் பொருளியல் முடக்கங்களின்போதும் மக்கள் அனுபவித்த துயரங்களை அவர் ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இது அரிதான ஒன்று என்று கருதப்படுகிறது. "கொவிட்-19 கிருமியைக் கட்டுப்படுத்துவதில் நாடு புதிய கட்டத்தை எட்டுகிறது. இந்தச் சூழ்நிலையை மக்கள் பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும்," என்று அதிபர் ஸி அழைப்பு விடுத்தார்.
"கூடுதலாக முயற்சிகளை மேற்கொண்டு சிரமத்தில் இருந்து மீண்டு வருவோம். ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் தான் வெற்றிக்கு வழி," என்று அவர் கூறினார்.
நாட்டின் பொருளியல் பற்றி கருத்து கூறிய அதிபர் ஸி, சீனா வலுவான வளர்ச்சியை அனுபவித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 120 டிரில்லியன் யுவானை (S$23 டிரில்லியன்) விஞ்சிவிட்டது என்று அதிபர் குறிப்பிட்டார்.
இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் சீனப் பொருளியல் 2022ல் குறைந்தபட்சம் 4.4% வளர்ச்சி கண்டிருப்பதாகத் தெரியவருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் கடந்த அக்டோபரில் நடந்தது. அதில் அதிபர் ஸி மூன்றாவது தடவையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் 2022வது ஆண்டு தனக்குப் பெரும் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும் என்று அவர் நம்பியிருந்தார்.
என்றாலும் ஒரு மாதத்திற்குப் பிறகு அவருடைய அரசாங்கம் கடுமையான சோதனைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
கொரோனாவுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் பூஜ்ஜியக் கிருமிக் கொள்கையை எதிர்த்து பொதுமக்கள் கோபமடைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அது பற்றி தன்னுடைய புத்தாண்டுச் செய்தியில் மறைமுகமாக குறிப்பிட்ட அதிபர், 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில், அவர்களிடம் வெவ்வேறான கவலைகளும் அக்கறைகளும் கருத்துகளும் நிலவுவது இயல்பான ஒன்றுதான் என்றார்.
"தகவல் தொடர்பு, ஒருங் கிணைந்த ஆலோசனை மூலம் கருத்து இணக்கத்தை நாங்கள் பலப்படுத்துகிறோம். அதுதான் முக்கியம்," என்றார் அதிபர்.

