மூன்றாண்டு காலமாக நடைமுறைப்படுத்தி வந்த கொவிட்-19 கட்டுப்பாடுகளை சீனா நாளை (ஜனவரி 8) தளர்த்துவதன் மூலம் மற்ற நாடுகளைக் காட்டிலும் தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுப்பயண பொருளியல் பெரிதும் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீன சுற்றுப்பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில், தென்கிழக்காசியா மீது அந்தப் பயணிகள் கவனம் செலுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
1.4 பில்லியன் மக்கள்
தொகையைக் கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான சீனா, புதிய வகை ஓமிக்ரான் கிருமியால் சிரமங்களை எதிர்நோக்கும் வேளையிலும் நாளை முதல் அது தனது எல்லைகளை அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடுகிறது.
மூன்றாண்டு காலமாக நடப்பில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் விலக்கப்படுவது ஏராளமான பயணிகளை ஈர்க்கும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சீனாவிலிருந்து பலரும் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது. புதிதாக நடமாடத் தொடங்கும் சீனச் சுற்றுப் பயணிகள் தொந்தரவு குறைந்த, பரிசோதனைகளைக் கட்டாயப்படுத்தாத இடங்களைத் தெரிவு செய்யக்கூடும் என்றும் அந்த வகையில் தென்கிழக்காசிய நாடுகள் அவர்களின் தெரிவாக இருக்கக்கூடும் என்றும் சிஐஎம்பி வங்கியின் பொருளியல் நிபுணர் சோங் செங் வும் தெரிவித்துள்ளார்.
இந்த வட்டார விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிவது வட்டார பொருளியல் நாடுகளுக்கு நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவில் இருந்து உள்ளே வருவோருக்கு 'கொவிட்-19 தொற்றில்லை' சான்றிதழைக் கட்டாயப்படுத்தி உள்ளன.
அதேநேரம், கம்போடியா தொடங்கி இந்தோனீசியா, சிங்கப்பூர் வரையிலான தென்கிழக்காசிய நாடுகள் அதுபோன்ற கட்டுப்பாட்டை சீனாவிலிருந்து வருவோருக்கு விதிக்கவில்லை.
எல்லா நாட்டினரையும்போல சீன நாட்டினரும் வழக்கமாக வந்துபோகலாம் என 11 தென்கிழக்காசிய நாடுகளும் அறிவித்துள்ள போதிலும் மலேசியாவிலும் தாய்லாந்திலும் சிறியதொரு காட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுவும் சீனர்களைக் குறிவைக்கவில்லை. வந்து இறங்கும் அனைத்துலக விமானங்களின் கழிவுநீரைப் பரிசோதனைக்கு அனுப்ப மலேசியா ஏற்பாடு செய்து உள்ளது.
பொது சுகாதார ஆய்வுக்கூடத்தில் 'பல்படியத் தொடர் வினை' முறையின்கீழ் கழிவுநீர் பரிசோதிக்கப்படுவதன் மூலம் பயணிகளில் யாருக்காவது கொவிட்-19 கிருமி தொற்றி இருந்ததா என்பதைக் கண்டறிவது இந்த ஏற்பாடு. எல்லாப் பயணிகளுக்கும் இது பொருந்தும்.
"எந்த ஒரு நாட்டினரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்பது எங்கள் நோக்கம்," என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து இருந்தார். பரிசோதனைக் கட்டுப்பாடுகள் இல்லை என்பது தெரியவரும் முன்னரே இந்த வட்டாரத்தில் பயண ஆர்வம் மிகுந்துவிட்டது.
மேலும், சீனாவிலிருந்து செல்வோரின் பயணம் மீளும் வேளையில் அவர்களுக்காக தலைசிறந்த பகுதியாக தென்கிழக்காசியாவை 76 விழுக்காட்டு சீனப் பயண நிறுவனங்கள் தரப்படுத்தி இருந்தன. டிசம்பர் மாதம் ஐடிபி சீனா என்னும் வர்த்தகக் காட்சியில் வெளியிடப்பட்ட ஆய்வு மூலம் இது தெரியவந்தது.
சுற்றுப்பயணம் சார்ந்த பொருளியலுக்கு உகந்த வட்டாரமாக தென்கிழக்காசியா விளங்குகிறது. சீனாவிலிருந்து வருவோர் இந்த வட்டார கடற்கரை பொழுதுபோக்கு, ஆடம்பரக் கடைத்தொகுதி, சூதாட்டக்கூடம் போன்றவற்றில் ஆர்வம் செலுத்துவது வழக்கம். கொவிட்-19 காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தன. சீனர்கள் மீண்டும் வருவதன் மூலம் அந்தப் பொழுதுபோக்குக் கூடங்களின் வர்த்தகம் மீளும். எனவே சீனச் சுற்றுப்பயணிகளை வரவேற்க அவை தயாராகி வருகின்றன.
2019ஆம் ஆண்டில் 155 மில்லியன் சீனர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து US$254.6 பில்லியன் செலவு செய்தனர். அந்த ஆண்டில், தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வியட்னாமுக்கு வந்து சென்ற 18 மில்லியன் வெளிநாட்டினரில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல சிங்கப்பூருக்கு வந்த அனைத்துலகப் பயணிகளில் ஐவரில் ஒருவர் சீனாவிலிருந்து வந்ததோடு $900 மில்லியனை அவர்கள் செலவு செய்தனர்.

