மலேசியாவின் சாபா மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் அரசியல் நெருக்கடிகளால் அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக சாபா
அம்னோவின் மூத்த தலைவர் அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.
நிலையான அரசியல் சூழலையும் மாநில அரசையும் பெற, நிரந்தர தீர்வு வேண்டும் என அவர்கள் ஏங்குவதாக அவர் கூறினார்.
அண்மையில், சாபா முதல்வர் திரு ஹஜிஜி நூருக்கு இனி ஆதரவு தரப்போவதில்லை என்று கூறி, அம்மாநிலத்தைக் கடந்த 27 மாதங்களாக ஆட்சி செய்யும் கூட்டணியிலிருந்து தேசிய முன்னணி விலகியது.
இதனால் மாநில அரசு கவிழ்ந்தது. இதற்கு சாபா தேசிய முன்னணித் தலைவர் புங் மொக்தார் ராடின் முக்கிய காரணமாக இருந்தார்.
இருப்பினும், திரு ஹஜிஜிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக தேசிய முன்னணியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்
துள்ளனர்.
இந்நிலையில், இந்தோனீசியாவில் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், நாடு திரும்பியதும் சாபாவுக்குச் சென்று நிலைமையைச் சரிசெய்ய இருப்பதாகக் கூறியுள்ளார்.
சாபாவில் நிலைமை தற்போது சீராக, அமைதியாக இருப்பதாக அவர் கூறினார்.
சாபா அரசாங்கத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் உறுதி அளித்தார்.
சாபா உட்பட ஒட்டுமொத்த மலேசியாவின் பொருளியல் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாக திரு அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

