சேவையிலிருந்தபோது 52 பேருக்கு நிரந்தர உடற்குறை
கடந்த 20 ஆண்டுகளில் 42 தேசிய சேவையாளர்கள், சேவையில் இருந்தபோது உயிரிழந்துவிட்டதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 35 தேசிய சேவையாளர் கள் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள்; நால்வர் சிங்கப்பூர் காவல்துறையினர்; மூவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸல் புவா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இங் நேற்று முன்தினம் எழுத்து வழி அளித்த பதிலில் இவ்விவரம் இடம்பெற்றிருந்தது.
மரணமடைந்தோரில் அறுவர் வேலைக்குச் செல்லும்போதோ வேலையிலிருந்து வரும்போதோ ஏற்பட்ட விபத்துகளில் அல்லது அலுவலகக் கடமைகளில் ஈடுபட்டிருக்கையில் உயிரிழந்ததாக அமைச்சர் கூறினார். இவர்களில் இருவர் சிங்கப்பூர் ஆயுதப் படை, மூவர் சிங்கப்பூர் காவல்துறை மற்றும் ஒருவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் என்ற விவரங்களையும் அவர் தமது பதிலில் குறிப்பிட்டார்.
20 ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆயுதப் படை, காவற்படை, குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றில் சேவையிலிருந்தபோது உயிரிழந்தோர், நிரந்தர உடற்
குறைக்கு ஆளானோர் எத்தனை பேர் என திருவாட்டி புவா கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த திரு இங், காயம் காரணமாக 52 பேருக்கு நிரந்தர உடற்குறை ஏற்பட்டதாகக் கூறினார். கடமையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட கடுமையான காயங்களால் மூளை, முதுகுத்தண்டு, கண்கள் மற்றும் கை கால்களில் நிரந்தர உடற்குறை ஏற்பட்டது.
இவர்களில் ஆக அதிகமாக சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 43 பேருக்கு நிரந்தர உடற்குறை ஏற்பட்டது. எஞ்சி யோரில் நால்வர் சிங்கப்பூர் காவல்துறையையும் ஐவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையையும் சேர்ந்தவர்கள். மேலும் உடற்குறை ஏற்பட்டோரில் 11 பேர் சேவையில் ஈடுபட்டிருந்தபோது போக்குவரத்து விபத்துகளில் சிக்கியவர்கள் என்ற விவரத்தையும் அவர் அளித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர் குடியுரிமை, நிரந்தரவாசத் தகுதியுடைய ஏறத்தாழ 300,000 ஆண்கள் இந்த மூன்று படைகளிலும் இணைந்து தேசிய சேவையாற்றுகின்றனர் என திரு இங் குறிப்பிட்டார்.
"இப்படைகளில் தேசிய சேவையாற்றும்போது ஏற்படும் மரண, நிரந்தர உடற்குறை விகிதங்கள் முறையே 0.001%, 0.001%, 0.002%ஆகப் பதிவாகியுள்ளன," என்று அவர் விளக்கினார். தேசிய சேவையின்போது உயிரிழப்பே நிகழக்கூடாது எனும் நிலையை எட்ட சிங்கப்பூர் ஆயுதப்படையும் உள்துறைக் குழுவும் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
நடப்பு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அனைத்து தேசிய சேவையாளர்களுக்குமான ஆயுள் காப்புறுதி அதிகபட்சம் $300,000 என்றும் காயங்களுக்கான காப்புறுதி அதிகபட்சம் $150,000 என்றும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள வாடகை வீட்டில் தீயை அணைக்கப் போராடியபோது எட்வர்ட் ஹெச் கோ என்னும் 19 வயது முழுநேர தேசிய சேவையாளர் உயிரிழந்தார்.

