கல்வி அமைச்சு ஆசிரியர் கைது

கல்வி அமைச்சு ஆசிரியர் கைது

3 mins read
6ef0fa62-a971-49e0-ae19-e91195b6fa57
-

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றத்துக்காக விசாரிக்கப்படும் முதல் அரசாங்க ஊழியர்

மோன­லிசா

உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் கல்வி அமைச்­சின் ஆசி­ரி­யர் முக­மது கைருல் ரிது­வான் முக­மது சரிப் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு வயது 38.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் கைது­செய்­யப்­பட்ட இவர் தீவி­ர­வாத உணர்­வைத் தூண்­டும் பல்­வேறு இணை­யத்­தள காணொ­ளி­கள் மூலம் தீவி­ர­வாத சித்­தாந்­தத்­தின்­பால் ஈர்க்­கப்­பட்­டார். குறிப்­பாக பாலஸ்­தீன-இஸ்­ரேல் போர் குறித்த ஃபேஸ்புக் காணொ­ளி­களை 2007ஆம் ஆண்டு முதல் இவர் பார்த்­த­தா­கக் கூறப்­படுகிறது.

சிங்­கப்­பூ­ர­ரான கைருல், காஸா சென்று ஆயு­த­மேந்­திப் போரி­ட­வும் தடுப்­புக்­கா­வ­லில் வைக்கப்படுவதைத் தவிர்க்­கும் நோக்­கில் மனி­த­நேய உதவி என்ற போர்­வை­யில் காஸா செல்­ல­வும் திட்­ட­மிட்­டார்.

ஹமாஸ் பயங்­க­ர­வாத இயக்­கத்­தில் குறிப்­பாக அதன் ராணு­வப் பிரி­வில் இணைந்து இஸ்­‌ரே­லி­யத் தற்­காப்­புப் படை­யி­னரை எதிர்த்­துப் போரிட இவர் ஆர்­வம் கொண்­டார்.

ஹமாஸ் இயக்­கத்­தி­ன­ரின் உத்­த­ர­வு­க­ளுக்­குக் கீழ்ப்­ப­டிந்து ஆயு­த­மேந்­திப் போரி­டு­வது மட்­டு­மன்றி ஆள்­க­டத்­தல், போர்க் கைதி­க­ளைக் கொல்­லு­தல் போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் கைருல் தயா­ராக இருந்­தார்.

இதற்­காக காஸா செல்­வ­தற்கு 2012, 2014, 2021ஆம் ஆண்­டு­களில் தீவிர முயற்­சி­யில் ஈடு­பட்­டார் கைருல். தேசிய சேவை­யின்­போது ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தக் கற்­றுக்­கொண்­ட­தும் களப்­ப­ணி­களில் ஈடு­பட்ட அனு­ப­வங்­களும் ஹமாஸ் இயக்­கத்­தில் செயல்­ப­டத் தனக்­குக் கைகொ­டுக்­கும் என்று இவர் நம்­பி­னார்.

ஹமாஸ் போரா­ளி­க­ளுக்­குத் தனக்­குத் தெரிந்த முத­லு­த­வி­க­ளைச் செய்ய விரும்­பி­னார் கைருல். மேலும் காஸா­வில் இருக்­கை­யில் தக­வல்­களை சமூக ஊட­கங்­களில் பகி­ரும் நோக்­கு­டன் அதற்கு ஏது­வாக அரபி மொழி­யை­யும் கற்­றுக்­கொண்­டார்.

இதற்­காக உயி­ரை­யும் கொடுக்­கத் துணிந்­தி­ருந்த கைருல் தன் குடும்­பத்­தா­ரி­ட­மும் இத்­த­கைய எண்­ணங்­களை விதைக்க முனைந்­தார். ஆனால் இவ­ரது முயற்சி வெற்­றி­பெ­ற­வில்லை. தன் பிள்­ளை­கள் பிறந்­த­நாள் கொண்­டா­டு­வ­தற்­குக்­கூட கைருல் தடை விதித்­தார்.

தீவி­ர­வா­தம் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக விசா­ரிக்­கப்­பட்ட முதல் அர­சாங்க ஊழி­யர் இவர் என்று நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கூறி­னார்.

வன்­மு­றையை ஆத­ரித்­தல், ஊக்­கு­வித்­தல், மேற்­கொள்­ளு­தல் அல்­லது அதற்­குத் தயார்ப்­ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்­றில் ஈடு­படும் எந்­த­வொரு தனி­ந­பர் மீதும் உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை கடும் நட­வ­டிக்கை எடுக்­கும் என்று திட்­ட­வட்­ட­மாக அவர் தெரி­வித்­தார். நம் சக மனி­தர்­களில் சிலர் தீவி­ர­வாத எண்­ணங்­க­ளு­டன் இருக்­கக்­கூடும். அதன் அறி­கு­றி­கள் குறித்த விழிப்­பு­ணர்வை பொது­மக்­கள் பெற்­றி­ருத்­தல் அவ­சி­யம் என்று குறிப்­பிட்ட அமைச்­சர், அத்­த­கை­யோரை அடை­யா­ளம்­கா­ணும் சில அறி­கு­றி­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டார்.

"இவர்­கள் தீவி­ர­வா­தம் சார்ந்த பொருள்­களை வைத்­தி­ருக்­கக்­கூடும். பிற இனம் அல்­லது சம­யத்­தைச் சார்ந்­தோர்­மீது கடும் வெறுப்­பைக் காட்­டக்­கூ­டும். குறிப்­பிட்ட தீவி­ர­வாத அல்­லது போரா­ளிக் குழுக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டும். வெளி­நாட்டு மோதல்­களில் பங்­கேற்­ப­தற்­காக அங்கு செல்ல ஆர்­வம் காட்­டக்­கூ­டும். தீவி­ர­வாத வன்­மு­றைச் செயல்­பா­டு­களில் ஈடு­பாடு இருப்­பதை வெளிப்­ப­டுத்­தக்­கூடும்," என்­றார் அமைச்­சர்.

விசா­ர­ணை­யில் கைருல் தனித்­துச் செயல்­பட்­டது தெரி­ய­வந்­தது. இவர் வேறு யாரை­யும் காஸா­விற்கு அழைத்­துச் செல்­லவோ வன்­மு­றைச் செயல்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­தவோ முனை­ய­வில்லை என்றது உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை.

தன் மாண­வர்­களை அவர் தீவி­ர­வா­தத்­தில் ஊக்­கு­விக்­க­வில்லை. சிங்­கப்­பூ­ரைத் தாக்­கும் எண்­ண­மும் அவ­ருக்கு இல்லை என்­று விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரி­லி­ருந்து கைருல் ஆசி­ரி­யப் பணி­யில் ஈடு­ப­ட­வில்லை என்று கல்வி அமைச்சு கூறி­யது.