பிரிட்டனில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவசரச் சேவைகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதாரத் துறை மற்றொரு நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்று கருதப்படுகிறது.
தேசிய சுகாதாரச் சேவை ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொடர்பில் இரண்டு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் தொடர்பில் அமைச்சர்களுடன் சென்ற திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குறைவான அவசர மருத்துவ உதவி வாகனங்கள் மட்டுமே (ஆம்புலன்ஸ்) சேவையில் ஈடுபடும் என்றும் அவசர மருத்துவ உதவியை நாடும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்க குறைவான ஊழியர்களே பணியில் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அண்மைய கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திலும் இதேபோன்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் நடைபெற்ற இத்தகைய முதல் வேலைநிறுத்தம் அது.
உயிருக்கு ஆபத்தான சூழல்களில் மட்டுமே அவசர மருத்துவ வாகனச் சேவையை நாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இம்மாதப் பிற்பகுதியில் தாதியர், இளநிலை மருத்துவர்கள், உடலியக்க சிகிச்சை வல்லுநர்கள் ஆகியோரும் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
பல்வேறு துறைகள் பாதிக்கப்படுவதால் நிலைமையைச் சமாளிக்க, வர்த்தக அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் வேலைநிறுத்தத் தடுப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தார்.
நேற்று முன்தினம் பரிந்துரைக்கப்பட்ட இந்தச் சட்டத்தின்கீழ், வேலைநிறுத்த நாள்களிலும் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், ரயில் சேவை ஆகிய அத்தியாவசியச் சேவைத் துறைகள் குறைந்தபட்ச சேவை வழங்குவது கட்டாயம்.
குறைந்தபட்ச சேவையின் அளவு குறித்து அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி பிரிட்டன் இவ்வாறு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஷாப்ஸ் கூறினார்.
"வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அரசாங்கம் பிரிட்டிஷ் மக்களிடமிருந்து பறிக்காது. ஆனால் போராட்டம் நடக்கும் நாள்களிலும் உடல்நலக் குறைவால் துன்புறுவோர் சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமைஅளிக்கப்பட வேண்டும். அதை உறுதிசெய்யும் பொருட்டு குறைந்தபட்ச பாதுகாப்புத் தரநிலையை அமல்படுத்த வேண்டியது முக்கியம்," என்று அமைச்சர் ஷாப்ஸ் கூறினார்.
ஆனால் இது மனித உரிமைகள், குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றின் மீதான தாக்குதல் என்று தொழிற்சங்கங்கள் குறைகூறுகின்றன. சுகாதாரத்துறைக்கு இது புதிய நெருக்கடியாக விளங்குமெனக் கருதப்படுகிறது.

