தமிழர்கள் பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவதாகவும் உழைப்பால் தங்களை மட்டுமின்றி தங்கள் நாடுகளையும் அவர்கள் உயர்த்தியுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அயலக தமிழர்களின் ஆற்றலும் ஆராய்ச்சி திறனும் தனிப்பெரும் வரலாறாக உருவாகி வருகிறது என்றார் திரு ஸ்டாலின். தமிழர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றார்களோ அவற்றையெல்லாம் செழிக்க செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
கடலும் கண்டங்களும் நம்மை பிரித்து வைத்திருந்தாலும் உலகில் வாழும் தமிழர்களை இணைக்கும் என்றும் அவர் கூறினார். நேற்று நிறைவடைந்த இரண்டு நாள் அயலகத் தமிழர் தின விழாவில் நிறைவில் திரு ஸ்டாலின் பேசினார்.
தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் பரவத் தொடங்கியதையும் அவர்கள் பல நாடுகளுடன் நல்லுறவு காத்ததையும் திரு ஸ்டாலின் சுட்டினார்.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் தமிழர்கள் முன்பே கால் பதித்ததையும் அவர்கள் இங்கு பல நூறு ஆண்டுகளாக வேரூன்றியதையும் சுட்டிக்காட்டும் வகையில், கடற்படை கொண்டிருந்த சோழ மன்னர்கள் மேற்கொண்ட பயணங்கள் பண்பாட்டு உறவுகளாக வளர்ந்திருப்பதாக அவர் கூறினார்.
அத்தொடர்புகளை வலுப் படுத்தும் நோக்கில், புலம் பெயர் தமிழர்கள் குறித்து விரிவாக ஆவணப்படுத்தப்படும்.
மேலும், வெளிநாடு செல்லும் தமிழர்கள் குறித்து தரவுத் தளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
வேலைக்காக வெளிநாடு சென்று எதிர்பாராமல் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறி முகப்படுத்தப்படும். அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் களின் பிள்ளைகள், இளையர் என 200 பேர் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு பண்பாட்டுச் சுற்றுலாவுக்காக தமிழ்நாடு அழைத்துச் செல்லப்படுவர் என்று திரு ஸ்டாலின் கூறினார்.
திரு ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம், பன்னாட்டுத் தமிழர்களுடனான உறவை வலுப்படுத்த கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சை உருவாக்கியதுடன் ஒவ்வோர் ஜனவரி 12ம் தேதியும் அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட இளம் நிறுவனங்களில் பொருளாதார பலம் பொருந்திய உலகத் தமிழர்கள்முதலீடு செய்ய வழிவகுக்கும் இணையத்தளத்தை திரு ஸ்டாலின் இரண்டு நாள்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார்.

