ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் நேற்று தொடங்கின. இதற்கான ஆயத்தப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூரோங் ரயில் பாதைக்கான அடிக்கல் நாட்டும் விழாவும் தெங்கா ரயில் பாலம் அறிமுக விழாவும் நேற்று நடைபெற்றன.
சிங்கப்பூரின் ஏழாவது எம்ஆர்டி ரயில் பாதையான ஜூரோங் வட்டார ரயில் பாதை 2027லிருந்து 2029ஆம் ஆண்டுவரை மூன்று கட்டங்
களாகத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாதையின் அன்றாடப் பயணிகள் எண்ணிக்கை ஆரம்பகட்டத்தில் 200,000ஆக இருக்கும் என்றும் ஜூரோங் புத்தாக்க வட்டாரம், தெங்கா நகரம், ஜூரோங் லேக் வட்டாரம் ஆகியவை மேம்படுத்தப்பட்ட பிறகு, அது 500,000க்கும் அதிகமாக உயரும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
அந்த 24 கிலோமீட்டர் நீளமுள்ள எம்ஆர்டி ரயில் பாதையில் 24 எம்ஆர்டி நிலையங்கள் இருக்கும்.
அத்துடன், பயணிகளை மற்ற எம்ஆர்டி ரயில் பாதை
களுடன் இணைக்கும் வகையில் பூன் லே, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய மூன்று எம்ஆர்டி சந்திப்புகள் இருக்கும்.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் பயணிகளுக்கான போக்கு வரத்து இணைப்பு மேம்படுத்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, ஜூரோங் வட்டாரத்தில் உள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இப்பாதை போக்குவரத்து வசதியை வழங்கும்.
ஜூரோங் வட்டார ரயில் பாதை தயாரானதும் மேலும் 60,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பத்து நிமிட நடையில் எம்ஆர்டி நிலையத்தை அடையலாம் என்று ஆணையம் தெரிவித்தது.

