பொன்மணி உதயகுமார்
பொங்கல் விழாவுக்கு முந்தைய நாளான நேற்று, பலரும் லிட்டில் இந்தியா வட்டாரக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கினர். இதனால் தேக்காவட்டார முக்கிய சாலைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.
இத்தகைய மக்கள் கூட்டம்தான் மறுநாள் தைப் பொங்கல் என்பதை நமக்கு உணர்த்தும் என்கிறார் இல்லத்தரசியான 51 வயது வசந்தி ஈஸ்வரன். விழாக்காலங்களில் குடும்பத்துடன் சென்று பொருள்கள் வாங்குவது இவரது வழக்கம்.
பொங்கலுக்கு முந்தைய நாள் சென்றால் புதிய காய்கறிகள், அன்றலர்ந்த மலர்கள் கிடைக்கும் என்பதால் இதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நிர்வாகியான காமாட்சி கலியபெருமாள், 52. இதுபோன்ற தருணங்களில் பொங்கல் விழாவின் கோலாகலத்தை உணர முடிவதாகவும் இவர் சொன்னார்.
சிங்கப்பூரில் முதல்முறையாக பொங்கல் திருநாளைக் கொண்டாடவிருக்கும் திருமதி மைதிலி, 48, கேம்பல் லேனில் நேற்று தன் கணவருடன் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்க வந்திருந்தார். இந்தியாவில் கொண்டாடியது போலவே இங்கும் உணர்வதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
பணிச்சுமையால் ஏற்பட்ட நேரமின்மை காரணமாக கடைசி நேரத்தில் வந்தாலும் தேவையான பொருள்களை ஒரே கடையில் வாங்க முடிவதாகக் குறிப்பிட்டார் திரு மகேந்திரன், 48.
தனக்கு ஓய்வுநாள் என்பதால் நேற்றைய தினத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார் திரு சத்யமூர்த்தி, 58. வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்ததால் நேற்றுதான் நேரம் கிடைத்தது என்றனர் நண்பர்கள் மலரும் சரஸ்வதியும். ஈராண்டு கழித்து இம்முறை மக்களிடையே விழா உணர்வு அதிகரித்திருப்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

