ஈசூனில் நேற்று முன்தினம் இரவு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துமீது 'கெட்கோ' நிறுவன வாடகை கார் மோதியதில் அதன் 31 வயது ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஈசூன் அவென்யூ 2, ஈசூன் சென்ட்ரல் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் இரவு 10.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையில் நிற்காமல் சென்ற கார், வேறொரு திசையில் சென்றுகொண்டிருந்த பேருந்துச் சேவை 117ன் வலது பக்கத்தில் வேகமாக மோதுவதைக் காணமுடிகிறது.
இருக்கையில் சிக்கிக்கொண்ட கார் ஓட்டுநர் மீட்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்பட்டது.
பேருந்தில் பயணம் செய்த மேலும் ஆறு பேர் காயங்களுக்காக சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் சிகிச்சை பெற மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

