தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாட்டம் புக்கிட் பாஞ்சாங் குழுத்தொகுதியில் பாரம்பரியத்தைப் பறைசாற்றியது. பெண்டிங் சாலை திறந்தவெளியில் 16வது ஆண்டாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளோடு பற்பல அம்சங்களும் மிகுந்திருந்தன.
மக்களிசை பாடல்களைப் பாடும் செந்தில் -ராஜலட்சுமி கலைஞர்களின் கச்சேரியும் மணிமாறன் இசைக்குழு உள்ளிட்ட பல்வேறு உள்ளூர்க் கலைஞர்களின் ஆட்டம் பாட்டமும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைத்தன.
உரி அடித்தல், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுடன் ரங்கோலிக் கோலம், முளைப்பாரி ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டன. சிறார்களை மகிழ்விக்க பானை, காகிதங்களில் வண்ணம் தீட்டும் அரங்குகளும் இருந்தன. சிறப்பு அங்கமாக இவ்வாண்டும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்விழா காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக ஹாலந்து -புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். இவருடன் குழுத்தொகுதியின் மற்றோர் உறுப்பினர் எட்வர்ட் சியா, சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்தியரல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலையில் வந்திருந்தனர். அத்துடன் இந்தியரல்லாத நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி தமிழரின் பாரம்பரிய கும்மி ஆட்டத்தை ஆடினர். இவை இரண்டும் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் நேற்று இடம்பெற்றன.
விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு மூர்த்தி பெருமாள் தமிழ்முரசிடம் கூறுகை யில், "இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஏராளமான மக்கள் ஒன்றுகூடி பொங்கல் திருநாளைக் கொண்டாடியது மகிழ்ச்சி. இந்தியரல்லாத பலரும் ஒன்றிணைந்து இத்திருநாளைக் கொண்டாடுவது நமது இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றியது," என்றார்.

