சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதன்முறையாகக் குறைந்துள்ளது. இதனையடுத்து, உலகில் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறிவிடும் என்றும் அது இந்த ஆண்டிலேயே நிகழக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் பிறப்பைக் காட்டிலும் இறப்பு அதிகமாகப் பதிவானது. சென்ற ஆண்டு அங்கு 9.56 மில்லியன் குழந்தைகள் பிறந்தனர்; 10.41 மில்லியன் பேர் மாண்டுபோயினர். அதாவது, பிறப்பைக் காட்டிலும் இறப்பு எண்ணிக்கை 850,000 அதிகமாக இருந்தது.
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக சீனாவில் குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற எண்ணிக்கையில் பிறப்பு விகிதம் இருந்தது. சீன வரலாற்றில் இதுவே ஆகக் குறைந்த பிறப்பு விகிதம். முந்திய 2021ல் இவ்விகிதம் 7.57ஆகப் பதிவானது.
மாறாக, 1976ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக அங்கு இறப்பு விகிதம் அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டு அங்கு 1,000 பேருக்கு 7.37 பேர் என்ற விகிதத்தில் இறப்பு பதிவானது. 2021ல் இது 7.17ஆக இருந்தது.
மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த சீன அரசு முன்னர் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளே இப்போதைய நிலைமைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு 1985 முதல் 2015 வரை 'ஒரு குழந்தை' கொள்கை நடப்பில் இருந்தது. கல்விச் செலவுகளும் உச்சத்தில் இருந்ததால், பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தைக்குமேல் பெற்றுக்கொள்ளவில்லை; சிலர் குழந்தை பெற்றுக்கொள்வதையே தவிர்த்தனர்.
'கொவிட்-19 அறவே இல்லாத நிலை' என்ற நோக்கத்துடன் சீனா செயல்பட்டதும் மக்கள்
தொகையில் பாதிப்பை ஏற்
படுத்திவிட்டது என்பது மக்கள்தொகை வல்லுநர்களின் கருத்து.

