சிங்கப்பூரின் பயணத்துறை அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக மீட்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு முன்னர் இவ்வாண்டு இங்கு வரக்
கூடிய வெளிநாட்டுப் பயணி
களின் எண்ணிக்கை 12 மில்லியன் முதல் 14 மில்லியன் என இரட்டிப்பாகக்கூடும்.
கடந்த ஆண்டு 6.3 மில்லியன் பயணிகள் சிங்கப்பூர் வந்தனர்.
இவ்வாண்டு சுற்றுப்பயணிகள் இங்கு செலவு செய்யும் தொகை $18 பில்லியன் முதல் $21 பில்லியன் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று இந்த முன்னுரைப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருந்ததால் இவ்வாண்டுக்கான முன்னுரைப்பு கூட்டப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு வருகை புரிந்த 6.3 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் இங்கு செலவு செய்த தொகை ஏறக்குறைய $14 பில்லியன்.
சுற்றுப்பயணிகள் இங்கு செலவு செய்த தொகையைப் பொறுத்தமட்டில், இந்தோனீசியாவிலிருந்து வந்தோர் முதலிடம் பிடித்தனர்.
கடந்த ஆண்டு அவர்கள் சிங்கப்பூரில் செலவு செய்த தொகை $1.1 பில்லியன்.
இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்கள் இரண்டாமிடத்தையும் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்தவர்கள் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். அவர்கள் செலவு செய்த தொகை முறையே $704 மில்லியன், $633 மில்லியன்.
எனினும், கொவிட்-19க்கு முன்பிருந்த நிலவரத்துடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அவர்கள் செலவு செய்த தொகையும் இன்னும் குறைவாகவே உள்ளன.
2019ல் சுற்றுப்பயணிகளின் வருகை சாதனை அளவாக 19.1 மில்லியனை எட்டியிருந்தது. அந்த ஆண்டு அவர்கள் இங்கு செலவு செய்த தொகை $27.7 பில்லியன்.
கவலைக்குரிய புதிய கொவிட்-19 திரிபு தலைதூக்காமல், அனைத்துலக விமானச் சேவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதன் அடிப்படையில் சுற்றுப்பயணிகளின் வருகை குறித்த முன்னுரைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தகம், ஓய்வு போன்றவற் றுக்கான பயணத்தை அதிகரிக்கும் வகையில் பயணத்துறைக்கு அரசாங்கம் $500 மில்லியன் ஒதுக்கி உள்ளது. இவ்வாண்டு அந்தத் துறை மீட்சியடைவதன் மூலம் இந்தத் தொகையில் ஒரு பகுதி, அதாவது $110 மில்லியன் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பயணத்துறை மீட்சியின் வேகத்தை சில காரணிகள் குறைக்கக்கூடும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத் தலைமை நிர்வாகி கெய்த் டான் கருதுகிறார்.
உலகப் பொருளியல் மந்தம், சில நாடுகளின் புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் போன்றவை அவை என்று கூறிய திரு டான், இந்தியா அண்மையில் சிங்கப்பூர் பயணிகளுக்கு விதித்த கட்டாய கொவிட்-19 பரிசோதனைக் கட்டுப்பாடும் அவற்றுள் ஒன்று என்றார்.
சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் பயணி களுக்கு ஜனவரி 1 முதல் இந்தக் கட்டுப்பாட்டை இந்திய அர சாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவ்வாண்டு 14 மி. பயணிகள் வரக்கூடும்; 2024ல் முழுமையான மீட்சி எதிர்பார்ப்பு

