மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இம்மாத இறுதியில் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை புரிவார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஸாம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் நேற்று முன்தினம் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்த பின்னர் நேற்று அவர் தனது அறிக்கையில் அன்வாரின் பயண விவரத்தை வெளியிட்டார்.
திரு அன்வார் பிரதமர் என்ற முறையில் இந்தோனீசியாவுக்கு இம்மாதம் 8, 9 தேதிகளில் முதல் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டார். சிங்கப்பூர் அவரது இரண்டாவது வருகையாக அமையும்.
டாக்டர் விவியன் இன்றுவரை மூன்று நாள் பயணமாக மலேசியா சென்றிருக்கிறார். திரு அன்வார் நவம்பர் மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் மேற்கொண்டிருக்கும் முதல் அதிகாரத்துவ மலேசிய வருகை இது.
டாக்டர் விவியனைச் சந்தித்தபோது தாங்கள் இருவரும் இருநாடுகளுக்கும் இடையிலான உன்னத, நீண்டகால உறவுகளை மறுஉறுதிப்படுத்தியதாக டாக்டர் ஸாம்ரி குறிப்பிட்டார்.
மேலும் சிங்கப்பூர்-மலேசிய உறவை இன்னும் அதிகமாக வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மலேசியப் பிரதமரின் இம்மாத இறுதி சிங்கப்பூர் வருகை குறித்தும் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் மார்ச் மாத உத்தேச மலேசிய வருகை குறித்தும் டாக்டர் விவியனுடன் பேசியதாக அவர் கூறினார்.
மலேசியாவின் புதிய அரசாங்கத்தின்கீழ் இருநாடு
களின் தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக டாக்டர் ஸாம்ரி கூறினார்.
பிரதமர் பதவி ஏற்றபோது திரு அன்வாரை வாழ்த்திய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், விரைவில் சிங்கப்பூர் வருமாறு அழைத்திருந்தார்.
நவம்பர் 25ஆம் தேதி திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில், "பிரதமர் அன்வார் விரைவில் சிங்கப்பூர் வருமாறு அழைத்திருக்கிறேன். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த புதிய அரசாங்கத்துடனும் திரு அன்வாருடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

