சீனாவிலிருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு, கொவிட்-19 காலத்திற்கு முந்திய அளவில் 30 விழுக்காட்டுக்கும் 60 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எதிர்பார்க்கிறது.
தொற்றுப் பரவலுக்கு முன்னர் ஆண்டுக்கு சராசரியாக 3.6 மில்லியன் பேர் சீனாவிலிருந்து வந்தனர்.
இருப்பினும் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை எவ்வளவு விரைவாக சீனா தனது வெளிப்பயணத்தை அனுமதிக்கிறது என்பதையும் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான விமானப் பயணங்களின் எண்ணிக்கை மீள்வதையும் பொறுத்து அமையும் என்று கழகத்தின் அனைத்துலகப் பயணப் பிரிவின் உதவி தலைமை நிர்வாகி ஜூலியானா குவா கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 38 விமானங்கள் இயக்கப்படுவதாக அவர் சொன்னார். இது, கொவிட்-19க்கு முந்திய அளவில் 10 விழுக்காட்டுக்கும் குறைவு. அப்போது ஒவ்வொரு வாரமும் சீனாவின் 20 நகரங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன.

