தாமதிக்காமல் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்கிறார் பிரதமர் அன்வார்
மலேசியா 1.5 டிரில்லியன் ரிங்கிட் கடனில் உள்ளதாகவும் இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
மலேசிய வரவு-செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற திரு அன்வார், நாட்டின் கடன் 1.2 டிரில்லியன் ரிங்கிட் என்றிருக்கும் நிலையில் திருப்பித் தரப்பட வேண்டிய கடன்பொறுப்புகளையும் சேர்த்து 1.5 டிரில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்து உள்ளது என்றார்.
முன்னைய அரசாங்கம் கடந்த ஆண்டு அக்டோபரில் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்தத் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் முன்னர் பொதுத் தேர்தலுக்கு வழிவிட்டு மன்றம் கலைக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தின் முழு வரவுசெலவுத் திட்ட அறிக்கை பிப்ரவரி 24ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடன் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட அளவைத் தாண்டிவிட்டதால் இது பொருளியலில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக நிதி அமைச்சருமான திரு அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் கடன்சுமை காரணமாக மலேசியாவின் வரவுசெலவுக்கான பற்றாக்குறை முன்னர் கணிக்கப்பட்ட 5.8 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் கடன் 1 டிரில்லியன் ரிங்கிட்டைத் தொட்டுவிட்டதாக 2018ஆம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றபோது மகாதீர் முகம்மது தெரிவித்து இருந்தார். தமக்கு முன்னர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நஜிப்பின் நிர்வாகம் செய்த தவறுகளால் கடன் அதிகரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
கடன் படிப்படியாக 1.045 டிரில்லியன் ரிங்கிட்டாக வளர்ந்துவிட்டது என்று கடந்த ஆண்டு ஜூன் இறுதியில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ஸஃப்ருல் அஸிஸ் கூறினார். அவர் குறிப்பிட்ட கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.8 விழுக்காடாக அப்போது இருந்தது.
இந்நிலையில், நாட்டின் பொருளியல் பலவீனமாகவே தொடருவதாக நேற்றைய கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பின்னர் திரு அன்வார் தெரிவித்தார்.
அனைத்துலக விவகாரங்களும் இந்தப் பலவீனத்திற்குக் காரணம் என்ற அவர், உக்ரேன்-ரஷ்ய போரையும் கொவிட்-19க்குப் பிந்திய நிலவரத்தையும் அதற்கு உதாரணங்களாகக் கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

