கொவிட்-19க்கு எதிரான அரசாங்கத்தின் செயல்பாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்ததைக் கருதி, பொது நிதி முறையாகச் செலவிடப்பட்டதை உறுதிப்படுத்த மறுஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பொது நிதியில் இழப்பு நேர்ந்திருந்தால் அது குறித்து புகார் அளிக்கப்பட்டு அது மீட்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழு ஒன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையைச் சமர்ப்பித்த பொதுக் கணக்குக் குழு (பிஏசி), பொது நிதிச் செலவினத்தை ஆராய்வதற்கென எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.
கொவிட்-19 தொடர்பில் 2020, 2021 நிதி ஆண்டுகளில் செலவிடப்பட்ட $72.3 பில்லியன், அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கைகளில் இடம்பெறவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் கொவிட்-19 செயல்பாடுகள் தொடர்பான பரிவர்த்தனைகள் நேர்மையான முறையில் நடந்தன என்பதையும் தவறான பணப் பட்டுவாடா இடம்பெறவில்லை என்பதையும் உறுதிசெய்தல் அவசியம் என்று குழுவின் தலைவர் ஃபூ மீ ஹார் கூறினார்.
சுகாதார மேம்பாட்டு வாரியம், சிங்கப்பூர் நில ஆணையம், மனிதவள அமைச்சு ஆகியவற்றின் நிர்வாகத்தில் குறிப்பிட்ட சில கொவிட்-19 கொள்முதல், செலவின விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொண்டதை அடுத்து குழுவின் பரிந்துரை இடம்பெற்றுள்ளது.
மூன்று தரப்புகளும் தங்களின் கொள்முதல், ஒப்பந்த நிர்வாகம் தொடர்பில் செயல்முறைகளையும் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி இருந்தாலும் ஒப்பந்ததாரர்களின் மதிப்பீட்டுப் பரிந்துரைப்பில் சில குறைபாடுகள் காணப்பட்டதாகவும் சில ஆவணங்கள் அங்கீகாரமற்றவையாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததாகவும் கூறப்பட்டது.
கடந்தாண்டு முன்பாதியிலிருந்து கொவிட்-19 தொடர்பான கொள்முதல், செலவினம் பற்றிய கட்டுப்பாடுகளையும் சோதனைகளையும் நிதி அமைச்சு மறுஆய்வு செய்து வருகிறது. அத்துடன் அரசாங்க அமைப்புகளும் பரிவர்த்தனைகள் முறையாக செய்யப்பட்டதை உறுதிப்படுத்த தணிக்கை மேற்கொண்டு வருவதாக பிஏசி தெரிவித்தது.
இந்நிலையில், ஒழுங்குமுறையான ஆவணங்கள் தக்கவைக்கப்படுவது, முக்கிய முடிவுகளும் பரிவர்த்தனைகளும் ஆவணங்களுடன் பதிவாவது போன்றவற்றின் தொடர்பில் நிதி அமைச்சு பரிந்துரை செய்துள்ளதாக குழு தெரிவித்தது.
பொதுச் சேவை வழங்கப்படுவது தொடர்பான தரநிலைகள், கொள்ளைநோய்க்கு முந்திய நிலைக்குக்கீழ் போகாதவாறு அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பிஏசி அதன் அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
புது இயல்புநிலைக்கு சிங்கப்பூர் மாறிவரும் நிலையில், மின்னிலக்கத் திறன்களில் சற்று பின்தங்கியோரும் இச்சேவைகளைப் பெறும் வசதி இருப்பது முக்கியம் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, மானியங்களை நிர்வகிப்பதில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பிடம் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக பிஏசி தெரிவித்துள்ளது.

