சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் நாளுக்கு சுமார் 36,000 பேர் சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் கொள்ளைநோய் தாக்கம், வரும் நாட்களிலேயே மரணத்திற்கு வழி செய்யும் ஆகக் கொடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதிஅன்று வெளியிடப்பட்ட அதன் முன்னுரைப்பை 'ஏர்ஃபினிட்டி' என்ற சுயேச்சை முன்னுரைப்பு நிறுவனம் மாற்றியதை அடுத்து இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய் அதிர்ச்சியளிக்கும் வேகத்தில் பரவி வருவதுடன் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான சீனாவில் கிருமிப் பரவல் நிலை குறித்த தெளிவான தகவல்கள் இல்லாததால் இந்த முன்னுரைப்பு வந்துள்ளது.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் குடும்பங்களுடன் இணைவதற்குப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் கிருமிப் பரவலும் அதிகரிக்கலாம் என்பதால் சீனா 'நீண்டதொரு, மேலும் கடுமையான கொவிட்-19 அலை'யைச் சந்திக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது.
"அடுத்த இரண்டு வாரங்களுக்கு சீனாவின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் மீது கணிசமான சுமை ஏற்படும் என்று எங்களின் முன்னுரைப்பு கூறுகிறது," என்றார் 'ஏர்ஃபினிட்டி'யின் பகுப்பாய்வு இயக்குநர் டாக்டர் மேட் லின்லி.
சிகிச்சையின் மூலம் குணமடையக்கூடிய நோயாளிகளும் கூட்டம் நிரம்பி வழியும் மருத்துவமனைகளாலும் பராமரிப்பின்மையாலும் உயிரிழக்கக்கூடும் என்றார் அவர்.
சீனாவின் ஒரு சில மாநிலங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியிருக்கலாம் என்ற அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த முன்னுரைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதத்திலிருந்து இதுவரையில் சீனாவில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 மரண எண்ணிக்கை 608,000 ஆக இருக்கலாம் என்று 'ஏர்ஃபினிட்டி' மதிப்பிடுகிறது.
இதற்கிடையே, சீனப் புத்தாண்டு காலத்தில் 2.1 பில்லியன் பேர் பயணம் மேற்கொள்வர் என்று சீன அரசாங்கம் கணித்துள்ளது. இது 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

