நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பதவி விலகுவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார்.
நாட்டை வழிநடத்த இனியும் செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை என்கிறார் அவர்.
"வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பதவி விலகுவேன். பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்," என்றும் அவர் சொன்னார்.
திருமதி ஆர்டர்ன், 42, கண்ணீரை அடக்கிக் கொண்டு ஐந்தரை ஆண்டு பிரதமர் பொறுப்பில் பெரும் சிரமங்களைச் சந்தித்தாகவும் தானும் ஒரு மனிதன்தான் என்றும் பதவியிலிருந்து தற்போது விலக விரும்புவதாகவும் கூறினார்.
"இந்தக் கோடை காலத்தில் மற்றொரு தவணைக் காலத் திற்கு தயாராகும் வழிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை," என்று தொழிற் கட்சி கூட்டம் நடைபெற்ற நேப்பியரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
"என்னுடைய முடிவிற்குப் பிறகு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி நிறைய விவாதங்கள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சில பெரிய சவால்களுடன் ஆறு ஆண்டு களின் இறுதியில் ஒரு மனித ராகவே இருக்கிறேன். அரசியல்வாதிகளும் மனிதர்களே, எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்கிறோம். என்னைப் பொறுத்தவரை நேரம் வந்துவிட்டது," என்றார்.
பிரதமர் பொறுப்பு தன்னை பாதித்ததாகவும் திருமதி ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நியூசிலாந்தின் ஆளும் தொழிற்கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக் கும் வேலையில் இறங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் கட்சிக்கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
அக்கட்சியின் புதிய தலைவர் அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமராக நீடிப்பார்.
திருமதி ஆர்டர்ன் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் பதவி விலகுவார் என நம்பப்படுகிறது. வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் பொதுத்தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிரான்ட் ராபர்ட்சன், தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் யார் அடுத்த தலைவர் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
'சிங்கப்பூரின் உற்ற நண்பர்'
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் சிங்கப்பூரின் உற்ற நண்பர் என்று பிரதமர் லீ சியன் கூறியுள்ளார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் லீயின் கருத்து வெளியாகியுள்ளது. திருமதி ஜெசிந்தா ஆர்டர்னின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். "பல அம்சங்களில் அவர் ஊக்கமூட்டும் நபராக இருந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக் கிறேன்," என்று தனது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.
2019ல் முதல் முறையாக அவர் சிங்கப்பூருக்கு வருகையளித்தபோது இரு தரப்பு உறவு மேலும் மேம்பட்டு சிறப்பான நிலையை எட்டியது என்று கூறிய பிரதமர் லீ, நியூசி லாந்தின் கிறைஸ்ட்சர்ச் தாக்குதல், கிருமிப் பரவல் உள்ளிட்ட சவால்களை திறம்படச் சமாளித்து நாட்டை வழி நடத்துவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் திருமதி ஜெசிந்தா ஆர்டர்ன் செயல்பட்டார் என்றார்.

