சீனப் புத்தாண்டுக் காலத்தில் கொவிட்-19க்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் லீ சியன் லூங் தமது சீனப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்கள் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரத்தைப் போற்றவும் குடும்பத்துக்கு அதிக முன்னுரிமை கொடுக்கவும் அவர் அழைப்புவிடுத்தார்.
சீனப் புத்தாண்டு மீண்டும் முழுவீச்சில் கொண்டாடப்படும் அதே நேரத்தில், மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதுடன் சமூகப் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் லீ கூறினார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 நிலைமை சீராக உள்ளது. ஆனால், புதிய திரிபுகள் தோன்றி எதிர்பாராத சவால்களைக் கொண்டு வரலாம் என்றார் அவர்.
தேவைப்பட்டால், குறிப்பாக வயதான உறவினர்களைக் காணச் செல்வதற்கு முன் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் உடல்நலம் குன்றியிருந்தால் வீட்டிலேயே இருக்குமாறும் சிங்கப்பூரர்களை திரு லீ கேட்டுக்கொண்டார்.
"மிக முக்கியமாக, அண்மைய கால இருவகை திறன் கொண்ட தடுப்பூசிகள் உள்பட, தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுங்கள். கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசியே இன்னும் சிறந்த பாதுகாப்பாக உள்ளது," என்றார் அவர்.
"சிங்கப்பூர் தொடர்ந்து செயல்பட, கொவிட்-19க்கு எதிராக முன்னிலையில் போராடுபவர்களின் கடின உழைப்பையும் தியாகங்களையும் நாம் மறந்துவிடக்கூடாது. சிங்கப்பூர் இதுவரையில் கொவிட்-19 நிலைமையைக் நிலையாக வைத்துள்ளது. அதேநேரத்தில் வெளிப்புற தொற்றுநோய் பரவல் போக்குகளை எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது," என்று அவர் மேலும் சொன்னார்.
பகிரப்பட்ட கொவிட்-19 அனுபவங்கள், மக்கள் தங்கள் குடும்பங்கள், அன்புக்குரியவர்களின் அருமையை உணரச் செய்துள்ளது என்றார் பிரதமர்.
"சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பின் அடித்தளமாகக் குடும்பங்கள் உள்ளன. வலுவான குடும்பங்களே, நிலையான, மீள்தன்மைமிக்க சமூகத்திற்கு மையம்," என்ற அவர், சிங்கப்பூரில் 2022 குடும்பங்களைக் கொண்டாடும் ஆண்டாக அர்ப்பணிக்கப்பட்டதை சுட்டினார்.
அவர், பெற்றோருக்கான ஆதரவை அதிகரிக்கும் மாற்றங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளதை அவர் கோடிகாட்டினார்.
சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் விகிதம் 2022ல் குறைந்தாலும், பல இளையர்கள் திருமணத்தையும் குழந்தை பெற்றுக்கொள்வதையும் முக்கியமான வாழ்க்கை இலக்குகளாகப் பார்க்கிறார்கள் என்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக திரு லீ கூறினார்.
குழந்தை வளர்ப்பதில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல தொடக்கத்தை வழங்குவதற்கும் பெற்றோருக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றார் அவர்.
எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு ஜனவரி முதல் அரசாங்க ஆதரவு பெற்ற பாலர் பள்ளிகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
"வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க ஒட்டுமொத்த சமூகத்தையும் ஊக்குவிக்கும் முயற்சிகள், நிகழ்ச்சிகளுடன் 'குடும்பங்களுக்கான சிங்கப்பூர் 2025'க்கான திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
"ஒவ்வொரு குடும்பமும் மதிக்கப்பட்டு, ஆதரிக்கப்படும் ஒரு சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் பங்களிக்கலாம்," என்றுபிரதமர் லீ கூறினார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றவும், ஊக்கமளிக்கும் வேலையிட கலாசாரத்தை வளர்க்கவும் நிறுவனங்களுக்கு பிரதமர் லீ அழைப்பு விடுத்தார்.
"குடும்பங்களைக் கொண்டாடவும் மேம்படுத்தவும் சமூகப் பங்காளிகள் வளங்களைத் திரட்ட முடியும். தனிமனிதர்களும் குடும்ப நேரத்தைப் போற்றி, அதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்," என்றார் பிரதமர்.
அனைத்து சிங்கப்பூரர்களும் உடல் நலத்தையும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளையும் பிரதமர் லீ தெரிவித்துக்கொண்டார்.

