பொருளியல் மந்தநிலையைத் தவிர்க்கவும் பொருளியலை தொடர்ந்து வளர்க்கவும் சிங்கப்பூர் விரும்புவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த எதிர்பார்ப்பு, வெளிப்புறச் சூழ்நிலைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
"கொவிட்-19 அறவே இருக்கக்
கூடாது என்னும் கொள்கைக்கு விடைகொடுத்த பின்னர் சீனா என்ன செய்து
வருகிறது என்பதையும் சீன அரசாங்கம் வழக்கமான பணிகளுக்குத் திரும்பு
கிறதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்று திரு லீ நேற்றுக் காலை செய்தியாளர்
களிடம் தெரிவித்தார்.
எல்லாவிதமான சாத்தியக்கூறுகளுக்கும் தேவைப்படும் ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருப்பதாகவும் சிறந்த முடிவுகளை எட்டுவதற்கான முயற்சிகளில் சிங்கப்பூர் இயன்றவரை ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.
உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திலுள்ள பேருந்து நிலையத்திற்கு நேற்று வருகையளித்த திரு லீ, அங்கிருந்த பேருந்து ஓட்டுநர்
களையும் போக்குவரத்து ஊழியர்களையும் சந்தித்தார்.
சீனப் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியச் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் பேருந்து ஓட்டுநர்கள், நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கடினமான ஈராண்டு காலத்திற்குப் பின்னர், கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மீண்டும் வழக்க
நிலைக்குத் திரும்பி இருப்பதாக அவர் சொன்னார்.
மாண்டரின் மொழியில் பேசிய திரு லீ, "இந்த ஆண்டு உலகளாவிய நிச்சயமற்றநிலை எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் பொருளியல் மந்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் வளர்ச்சி மெதுவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
"இந்த மந்தநிலையைத் தவிர்த்து நம்மால் இன்னும் வளர்ச்சி காணமுடியும் என்று கருதுகிறேன். இருப்பினும் சீனா எவ்வாறு தன்னுடைய வழக்கமான பணிகளுக்குத் திரும்புகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டி உள்ளது," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "நீங்கள் உலகைச் சுற்றி கவனித்தால் நமக்கு வெளியேயும் நம்மைச் சுற்றியும் ஏராளமான கருமேகங்கள் உள்ளது தெரியும். இவற்றிலிருந்து நம்மை வேறுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
"அதேநேரம் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குத் தேவையான பெரும்
பாலான திறன்களை நாம் உருவாக்க வேண்டி உள்ளது. இந்த முயல் ஆண்டில் நாம் அதனைச் செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு," என்றார் பிரதமர்.
சிவப்புநிற ஹோங் பாவ் உறை, மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள், முகக்கவசங்கள் போன்றவை அடங்கிய அன்பளிப்புப் பை பொதுப் போக்குவரத்து ஊழியர்
களுக்கு வழங்கப்பட்டது.
மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, போக்குவரத்து, நிதி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், நிலப் போக்குவரத்து ஆணையத் தலைமை நிர்வாகி இங் லாங், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் மேரி லியூ, தலைமைச் செயலாளர் இங் சீ மெங் ஆகியோர் பிரதமருடன் வருகை
யளித்தனர்.

