அமைச்சர் ஓங்: சென்ற ஆண்டு மூன்று கொவிட்-19 அலைகளைச் சமாளிக்க நேரிட்டது
சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோருக்கு சென்ற ஆண்டு வாழ்க்கை கிட்டத்தட்ட வழக்க நிலைக்குத் திரும்பியது. ஆனால் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணிபுரிவோர் மூன்று கொவிட்-19 கிருமிப் பரவல் அலைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறையினருக்குச் சென்ற ஆண்டு கடினமான ஆண்டாக இருந்தது என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன்தினம், செங்காங் பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களை அவர் சந்தித்தார்.
"சென்ற ஆண்டைப் பொறுத்தவரை சிங்கப்பூர் சமூகம் கிருமிப்பரவலில் இருந்து மேலும் மீண்டுவந்தது.
"சிங்கப்பூரர்கள் வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்பியதாகவே உணர்ந்தார்கள்.
"ஆனால் கொவிட்-19 கிருமியின் வெவ்வேறு திரிபுகளால் நோய்த்தொற்று அதிகம் பரவியது," என்றார் அமைச்சர்.
ஓமிக்ரான் பிஏ.2 திரிபு வேகமாகப் பரவி சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சத்தை எட்டியது. அதனை அடுத்து, ஜூன், ஜூலை மாதங்களில் பிஏ.5 திரிபும் பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் எக்ஸ்பிபி திரிபும் கிருமிப் பரவலை ஏற்படுத்தின.
செங்காங் பொது மருத்துவமனையின் வெவ்வேறு வார்டுகளுக்குச் சென்ற அமைச்சர் ஓங், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் மாண்டரின் ஆரஞ்சுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
"உங்கள் சேவைகள் அனைத்திற்கும் குறிப்பாக சென்ற ஆண்டு உங்களது பங்களிப்புக்கும் மிக்க நன்றி," என்று ஊழியர்களிடம் அமைச்சர் கூறினார்.
செங்காங் பொது மருத்துவமனைக்குச் செல்வதற்குமுன்அமைச்சர் ஓங், சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்துக்குச் சென்றிருந்தார்.
போக்குவரத்து மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறம் ஆகிய துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோருடன் இணைந்து டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோருக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கி அமைச்சர் ஓங் வாழ்த்துக் கூறினார்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின்கீழ் வரும், தேசிய டாக்சி ஓட்டுநர் சங்கம், தேசிய தனியார் வாடகை கார் ஓட்டுநர் சங்கம் ஆகியவற்றின் தலைவர்களும் உடன் சென்றிருந்தனர்.
"கொள்ளைநோய்ப் பரவல் காலகட்டத்தில் வருமானத்தை இழந்தாலும் மீள்திறனுடன் அந்த இருண்ட காலத்திலிருந்து மீண்டுவந்து, நமக்கும் இங்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கும் சேவையாற்றும் டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு நன்றி சொல்லும் நேரம் இது," என்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இரு தொழிற்சங்கங்களின் ஆலோசகருமான இயோ வான் லிங் கூறினார்.

