நியூசிலாந்தின் அடுத்த பிரதமராகவிருக்கும் கிரிஸ் ஹிப்கின்ஸ் (படம்), நாட்டின் தற்போதைய கொள்கைகளில் மாற்றம் தேவையா என்பது குறித்தும் முன்னுரிமைகளை மாற்றி அமைப்பது குறித்தும் தமது அரசாங்கம் விரைந்து முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.
தமது தலைமையின்கீழ், கொவிட்-19க்குப் பதில் மீண்டும் பொருளியல் வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
முன்னதாக, நேற்று முன்தினம் திருவாட்டி ஜெசிந்தா ஆர்டனுக்குப் பதில் தொழிற்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நியூசிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பணவீக்கம் உள்ளிட்ட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விவகாரங்களில் மீண்டும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
நியூசிலாந்தில் அடுத்த காலாண்டில் பொருளியல் மந்த நிலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வரும் அக்டோபர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்த்தரப்பைவிட ஆளுங்கட்சி பின் தங்கியிருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இருப்பினும் தமக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பதாகவும் நியூசிலாந்து மக்கள் தமக்குச் செவிசாய்ப்பர் என்று நம்புவதாகவும் திரு ஹிப்கின்ஸ் கூறுகிறார்.
'சிப்பி' என்று செல்லமாக அழைக்கப்படும் 44 வயது ஹிப்கின்ஸ், திருவாட்டி ஆர்டனின் அமைச்சரவையில் இடம்பெறும் மற்றவர்களைவிட கொவிட்-19 கிருமிப் பரவலைத் திறம்படச் சமாளித்ததற்காகப் பாராட்டப்பட்டவர். ஜூலை 2020ஆம் ஆண்டு நாட்டின் சுகாதார அமைச்சராகவும் அந்த ஆண்டிறுதியில் கொவிட்-19 விவகாரங்கள் தொடர்பான அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
திருவாட்டி ஆர்டன் அருவருக்கத்தக்க வகையில் நடத்தப்பட்டதைக் குறைகூறிய திரு ஹிப்கின்ஸ், தமது குடும்பத்தினரை இத்தகைய விவகாரங்களில் இருந்து பாதுகாக்க உறுதியளித்தார். சிலர் சமூக ஊடகங்களில் திருவாட்டி ஆர்டன்மீது வெறுப்பைக் காட்டும் விதமாகப் பதிவிட்டதையும் பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் பல்வேறு அவதூறுகளை அவர் பொறுமையுடன் சகித்துக்கொள்ள நேரிட்டதையும் திரு ஹிப்கின்ஸ் கடுமையாகக் குறைகூறினார்.
திரு கிரிஸ் ஹிப்கின்ஸ் நாட்டின் 41வது பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற வியாழக்கிழமை திருவாட்டி ஆர்டன் தமது பதவி விலகல் குறித்து அறிவித்தார். மன்னர் மூன்றாம் சார்ல்சின் பிரதிநிதியாகச் செயல்படும் கவர்னர் ஜெனரல் சிண்டி கைரோவிடம் அவர் இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்த பிறகு திரு ஹிப்கின்சை திருவாட்டி கைரோ புதிய பிரதமராக நியமிப்பார்.

