உலகளவில் அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடரும் பணிநீக்க அறிவிப்புகளால், அமெரிக்காவில் கிட்டதட்ட 80,000 இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை இழந்து தவிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் எச்-1பி, எல்1 விசாவில் அங்கு வசிப்பவர்கள். அவர்கள் 60 நாள்களுக்குள் வேறு வேலையைத் தேட வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும்.
இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த நவம்பர் முதல் தற்போது வரை அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 200,000 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதில் 30 முதல் 40 விழுக்காட்டு ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
மைக்ரோசாஃப்ட், மெட்டா, அமேசான், அல்ஃபபெட் ஆகிய நிறுவனங்கள் இதுவரையில் மொத்தம் 51,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
இதுவரை, 312,600 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர் என்று பொது அறிக்கைகள் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடும் Layoffs.fyi இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த 2023ல் மட்டும் 174 தொழில்நுட்ப நிறுவனங்கள் 56,570 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
பாதிக்கப்பட்ட பல இந்தியர்கள் தங்கள் கதைகளை பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கூகல் ஊழியர்களில் ஒருவரான மோனாம்பிகா எம், 10 மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார்.
எச்-1பி விசாவில் குடியேறியவரான தாம் உடனடியாக செயலில் இறங்க வேண்டும், ஓய்வு எடுக்க கால அவகாசம் இல்லை என்று கூறியுள்ளார்.
கூகலில் பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றொருவரான குணால் குமார் குப்தா அங்கு மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்கள் பணிபுரிந்தவர்.
எச்-1பி விசாவில் வசிக்கும் இவர், "நான் உடனடியாக புதிய வேலையைத் தொடங்கத் தயாராக உள்ளேன். எனக்கு உடனே வேலை வேண்டும். வேலை தேட 60 நாள்களே கொடுக்கப்படு கிறது" என்று கூறினார்.
இதற்கிடையில், ஸ்வீடிஷ் இசை நிறுவனமான ஸ்போடிஃபை 6% அல்லது சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
பெரும் அளவில் ஆள்குறைப்பு நடந்துள்ளதால், விசா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தித் தரும்படி, அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன
அமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பது கடினம் அல்ல என்று குவெஸ்ட் ஐடி ஸ்பாஃபிங் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜய் சிவராம் கூறினார்.
"முழுமையான பொறியாளர்கள், தரவு ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், டேவ்ஆப்ஸ் நிபுணர்கள், கிளவ்ட் செயலி பொறியாளர்கள் போன்றவர்களுக்குத் தேவை இருக்கும் என்றார் அவர்.

