சென்ற ஆண்டு மூலாதாரப் பணவீக்கம் 4.1 விழுக்காடாக இருந்தது
சீனப் புத்தாண்டை ஒட்டி, உணவு, சேவைத் துறைகளில் விலை அதிகரிப்பு, வரி உயர்வு ஆகியவற்றுக்கு இடையில் இவ்வாறு மூலாதாரப் பயனீட்டாளர் விலைக் குறியீடு நிலையாக இருப்பது, விரைவில் விலை குறையக்கூடும் என்ற நம்பிக்கையைக் குலைப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது இந்த ஆண்டும் மூலாதாரப் பணவீக்கத்தைத் தணிப்பது சவாலாகவே இருக்கும் என்பதற்கான அறிகுறி என்று அவர்கள் குறிப்பிட்டனர். பொருள்களின் விலை குறைந்தாலுமே அது சவாலாக இருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது.
தனியார் போக்குவரத்துக் கட்டணம், தங்குமிடக் கட்டணம் ஆகியவை தவிர்த்து மற்ற செலவுகளின் அடிப்படையில் மூலாதாரப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. இது, சிங்கப்பூர் குடும்பங்களின் செலவு விகிதத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மூலாதாரப் பணவீக்க விகிதம் 5.3 விழுக்காடாக இருந்தது. அக்டோபரில் 5.1 விழுக்காடாகக் குறைந்த அந்த விகிதத்தில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாற்றம் ஏதுமில்லை.
சென்ற மாதம் சில்லறை விற்பனை, இதர பொருள்களின் விலை, மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் போன்றவை மிகக் குறைவாகவே அதிகரித்தன. இருப்பினும் உணவு, சேவைத் துறைகளில் பணவீக்கம் அதிகமாக உயர்ந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்றுத் தெரிவித்தன.
சிங்கப்பூரில் சென்ற மாதம் மூலாதாரப் பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் மாற்றம் ஏதுமில்லை. தொடர்ந்து மூன்றாவது மாதமாகச் சென்ற மாதம் அது 5.1% கப் பதிவானது,
சென்ற மாதம் ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 6.5 விழுக்காடாகக் குறைந்தது. அதற்கு முந்தைய மாதம் அது 6.7 விழுக்காடாக இருந்தது. முன்னதாக சென்ற மாத ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 6.6 விழுக்காடாக இருக்குமென முன்னுரைக்கப்பட்டிருந்தது.
விலை உயர்வைத் தூண்டக்கூடிய உள்நாட்டு அம்சங்களால் இந்த ஆண்டு மூலாதாரப் பணவீக்க விகிதம் சவாலாகவே இருக்கும் என்றார் ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் வல்லுநர் செலினா லிங்.
இந்த மாதத்திலிருந்து உயர்த்தப்பட்ட பொருள், சேவை வரி, உள்ளூர் வேலைச் சந்தையில் நெருக்கடி தொடர்வதால் சம்பள ரீதியான பணவீக்கம், உணவு தொடர்பான பணவீக்கம், உள்ளூர் நிறுவனங்கள் செலவின உயர்வை ஈடுகட்ட வாடிக்கையாளர்களிடம் சுமையை மாற்றிவிடுதல் போன்ற அம்சங்களை அவர் சுட்டினார்.
பொருள், சேவை வரி உதவித் திட்டம், குடும்பங்களுக்கு வழங்கப்படும் $300 மதிப்புள்ள சமூக மேம்பாடு மன்றப் பற்றுச்சீட்டுகள் ஆகியவை சாமானியர்களுக்கு உதவியாக இருந்தாலும் அதிகரிக்கும் பணவீக்க விகிதம் தொடர்ந்து நெருக்குதல் தரும் அம்சமாகவே விளங்குவதாகத் திருவாட்டி லிங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு முழுமைக்குமான மூலாதாரப் பயனீட்டாளர் விலைக் குறியீடு சராசரியாக 4.1 விழுக்காடாகப் பதிவானது. ஒப்புநோக்க, 2021ல் அது 0.9 விழுக்காடு மட்டுமே.
விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு சென்ற ஆண்டு 6.1 விழுக்காடாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் அது 2.3 விழுக்காடாகப் பதிவானது. விலைவாசி உயர்வும் மூலாதாரப் பணவீக்கமும் அரசாங்கத்தின் மதிப்பீடுகளுக்கு ஏற்பவே பதிவாயின.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பணவீக்க விகிதம் 5.5 விழுக்காடு முதல் 6.5 விழுக்காடாக இருக்குமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. பொருள், சேவை வரி உயர்வைக் கருத்தில்கொண்டு இந்த முன்னுரைப்பு அமைந்துள்ளது.
இந்த ஆண்டின் முற்பாதியில் மூலாதாரப் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் இரண்டாம் பாதியில் சிறிது குறையும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்துள்ளன.

