ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக நேற்று போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் போக்குவரத்தும் தடைபட்டது.
பனிப்பொழிவுடன்கூடிய புயல்காற்றால் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருவரின் மரணத்துக்கும் புயல்காற்றுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்படுவதாக ஜப்பானிய அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜப்பானில் நிலவும் வழக்கத்துக்கு மாறான குளிர்ந்த வானிலையும் காற்றின் அழுத்தம் மிகவும் குறைந்ததாலும் நாடு முழுவதும் பனி பொழிவதுடன் நேற்று முன்தினத்திலிருந்து பலத்த காற்றும் வீசுகிறது.
ஜப்பானியக் கடலை நோக்கி அமைந்திருக்கும் வட்டாரங்களில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மணிவா நகரில், நேற்றுக் காலை 93 சென்டிமீட்டர் அளவிற்கு பனிப்பொழிவு பதிவானது.
உள்நாட்டில் சேவை வழங்கும் விமான நிறுவனங்கள் 300க்கு மேற்பட்ட விமானப் பயணங்களை ரத்து செய்தன. ஜப்பானின் வடக்குப் பகுதியில் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் தாமதமாக இயங்கின.
மத்திய ஜப்பானில் ஒரு விரைவுச்சாலையில் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவுக்கு கார்களும் லாரிகளும் நகர முடியாமல் போக்குவரத்து தடைபட்டதாக அரசாங்க ஒலிபரப்புக் கழகம் தெரிவித்தது. பனியை அகற்றுவதற்காக தேசியச் சாலைகள் மூடப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

