மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், கர்நாடக மாநிலக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நகைகள், வைரம், முத்து, பவளம், தங்கம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் ஏலம்விடும்படி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் திருவாட்டி ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 17 வருடங்களாக கர்நாடகக் கருவூலத்தில் உள்ள சேலைகள், காலணிகள், சால்வைகள் போன்றவை வீணாகி வருகின்றன.
எனவே, குறிப்பிட்ட 27 வகையான பொருள்களை மட்டும் ஏலம்விட்டு அதில் வரும் நிதியைக் கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட தொகையை வசூல் செய்யவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது.
பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி சென்ற ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இவ்வாறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், வழக்கறிஞர் ஒருவரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் ஏலம்விட நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருவாட்டி ஜெயலலிதாவிற்குச் சொந்தமான வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் விற்பனைக்கு விடப்படும்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் மேலும் 700 கிலோகிராம் எடையுள்ள வெள்ளிப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
அவற்றுடன் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 250 சால்வைகள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர்த்து, 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 81 தொங்குவிளக்குகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 12 குளிர்பதனப் பெட்டிகள், 10 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்டவையும் கர்நாடக மாநில அரசின் கரூவூலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
திருவாட்டி ஜெயலலிதாவின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர, வெள்ளி நகைகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 47 லட்சத்து 91 ஆயிரத்து 252 என மதிப்பிடப்பட்டிருந்தது. தனது ஆலோசகரிடம் 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை வழங்குமாறு ஜெயலலிதா கோரியதால் அவை ஆலோசகரிடம் வழங்கப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கில் திருவாட்டி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட திருவாட்டி ஜெயலலிதா திடீரென காலமானார். அதையடுத்து சசிகலா உள்ளிட்ட மற்ற மூவரும் நான்கு ஆண்டுச் சிறைத்தண்டனையை நிறைவேற்றினர். ஜெயலலிதாவின் பொருள்களை ஏலத்தில்விட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

