உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு அதிகமாக நடைபெற்று வந்தாலும் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியின் அடித்தளமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாகவும் தொழில்நுட்பம் தொடரும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்கள் மறுதிறன் பெறவும் திறன்மேம்பாடு பெறவும் முதலீடு செய்வதை சிங்கப்பூர் தொடரும் என்று கூறிய அவர், பசுமைப் பொருளியல் மேம்பாட்டில் உள்ள வாய்ப்பு
களைச் சுட்டினார்.
இது தவிர, வங்கித்துறை, தளவாடத் துறை மற்றும் ஹோட்டல் துறைகளும் தொழில்நுட்பத் திறனாளர்களை வேலைக்கு எடுப்பதில் தீவிரம் காட்டி வருவது கடந்த வாரம் வெளியான ஆட்குறைப்பு தொடர்பான அச்சங்களைத் தணிக்கக்கூடியதாக உள்ளது என்றும் திருவாட்டி டியோ கூறினார்.
மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகிய தொழில்நுட்பப் பெரு
நிறுவனங்கள் உலக அளவில் 28,000 பேரை ஆட்குறைப்பு செய்யப்போவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தன.
விற்பனை குறைந்து வருவதையும் பொருளியல் மந்தம் ஏற்படும் சாத்தியத்தையும் முன்னிட்டு அந்த ஆட்குறைப்பை அவை செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இவை தவிர்த்து கூகலின் தலைமை நிறுவனமான அல்ஃபபெட், ஃபேஸ்புக் சமூக ஊடகத்தை நடத்தும் மெட்டா, டுவிட்டர் ஆகியனவும் ஆட்குறைப்பை அறிவித்திருப்பது அவற்றின் சிங்கப்பூர் அலுவலகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
"இப்படிப்பட்ட சூழலில் தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா, உலகெங்கும் ஆட்குறைப்பு நடக்கும்போது நாம் மட்டும் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகளைப் பெற நமது மக்களை தொடர்ந்து ஊக்குவிப்பது சரியான செயலாக இருக்குமா என்ற கேள்விகள் எழுவது வழக்கம்," என்று 'ஸ்டெப் இட் அப்' என்னும் தொழில்நுட்பத் திறனாளர் திட்டத் தொடக்கத்தில் பேசியபோது திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
"தனக்குத் தேவைப்படும் அளவில் ஊழியரணியை இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் சரிப்படுத்தும் நடவடிக்கை வேதனைக்குரியதாக இருக்கக்கூடும். குறிப்பாக, ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் நிலை கவலைக்குரியதாக இருக்கலாம்.
"நேர்த்தியான அணுகுமுறை இன்றி ஆட்களை நியமிக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பின்னாளில் வளர்ச்சி குன்றியும் ஆள்பலம் அதிகமாகவும் இருக்கும்," என்றார் அமைச்சர்.
'ஸ்டெப் இட் அப்' திட்டத்தின்கீழ் நிரலிடுதலில் அனுபவமற்ற 400 பேர் அடுத்த ஈராண்டுகளில் மென்பொருள் வகுப்பாளர்களாக உருவாவதற்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான டெமஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) ஆதரவு வழங்குகிறது.
தொழில்நுட்பப் பின்னணி இல்லாத சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தொழில்நுட்பத் துறையில் வேலைகளைப் பெறுவதற்குரிய பயிற்சிகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். பயிற்சி பெறுவோர் அமர்த்தப்பட்டுள்ள வேலைகளுக்கு ஏற்ற பயிற்சிகள் நான்கு மாதப் பாடத்திட்டத்
துடன் அளிக்கப்படும்.
அந்த வகையில் கடந்த ஆண்டின் கடைசிப் பகுதியில் பயிற்சிபெறத் தொடங்கிய 22 பட்டதாரிகள் கொண்ட முதல் அணி, வரும் மார்ச் மாதம் டெமஸ் நிறுவனத்தில் முழுநேர ஊழியர் பணியைத் தொடங்கும் என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
கடந்த ஆண்டின் ஊழியர் நியமன நடவடிக்கையின்போது குறைந்தபட்சம் 800 பேர் ஆர்வம் காட்டியதாகக் குறிப்பிட்ட டெமஸ் தலைமை நிர்வாகி இயோ கியட் சுவான், தமது நிறுவனத்தின் ஊழியரணியை 2025ஆம் ஆண்டுக்குள் ஐந்து மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
அமைச்சர் டியோ: ஆட்குறைப்பு நடந்தாலும் வேலைவாய்ப்பு அதிகம்

