இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விருதுகள் நாட்டுக்காக பெரும் சேவைகள் புரிந்தோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கும் இந்தப் பட்டியலில் இடமுண்டு. அவர்களில், பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், 48 மாசி சடையன், 45, ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பாம்பு பிடிப்பதில் வல்லவவர்கள். குடியிருப்பு
களுக்குள் புகும் கொடிய நச்சுப்பாம்புகளைக்கூட சுலபமாக பிடிக்கக்கூடிய திறன் பெற்றவர்கள் இவர்கள்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமின்றி தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கும் சென்று இவ்விருவரும் பாம்புகளைப் பிடித்துள்ளனர். பாம்பு கடித்த பின் உடலில் ஏறும் நஞ்சை முறிப்பதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்
பதிலும் இந்த இருவரும் பங்காற்றி உள்ளனர்.
கலைத்துறைச் சேவைக்காக பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பில் பத்ம பூஷண் விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது இவர் ஒருவர் மட்டுமே. 77 வயதாகும் திருமதி வாணி ஜெயராம் வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். 10 இந்திய மொழிகளில் பாடல்கள் பாடிய இவர் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
மருத்துவச் சேவைக்காக மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, பரதநாட்டியக் கலைஞர் கே. கல்யாணசுந்தரம் பிள்ளை, நூலகரும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வுபெற்றுள்ளனர்.
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த கபசுர குடிநீரை முதன்முதலில் பரிந்துரை செய்தவர் மருத்துவர் வேலுச்சாமி.
அதேபோல, ஓய்வுபெற்ற நூலகரான திரு கல்யாணசுந்தரம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்விக்காக தம்மிடம் இருந்த செல்வ சேமிப்பு அத்தனையையும் செலவு செய்த பெருமைக்குரியவர்.
இந்திய அளவில் முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும் சாதனை புரிந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, புதுச்சேரி மருத்துவர் நளினி பார்த்தசாரதி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.