வடகலிஃபோர்னியா வட்டாரத்தில் இவ்வாரம் இரண்டு பண்ணைகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோரில் ஐவர் சீனக் குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள சீனத் துணைத் தூதரகம் இதனைத் தெரிவித்தது.
சீனா இச்சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக 'வீசேட்' வாயிலாக விடுத்த அறிக்கையில் துணைத் தூதரகப் பேச்சாளர் கூறினார்.
சம்பவங்கள் தொடர்பான விசாரணை குறித்துத் தகவல் பெற, சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்குத் தெற்கே உள்ள ஹாஃப் மூன் பே பகுதியில் அமைந்துள்ள இரண்டு பண்ணைகளில் சென்ற திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் மாண்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதன் தொடர்பில் 66 வயதான சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெய்ஜிங் இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை என்றபோதும், சீனா குறிப்பிடும் ஐவரில் யாரும் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றவர்களா என்று தெளிவாகத் தெரியவில்லை.
பண்ணைத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்குக் கிட்டத்தட்ட இரண்டு நாள் முன்பாக கலிஃபோர்னியாவின் மொன்டரே பார்க் பகுதியில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
சீன அரசாங்க ஊடகம் நீண்டகாலமாகவே அமெரிக்காவில் நடைபெறும் பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடுகள், ஆசியர்களுக்கு எதிரான வன்செயல்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்க சமூகம் பாதுகாப்பற்றது என்று கூறிவந்துள்ளது.
இருப்பினும் அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் நடந்த இவ்விரு சம்பவங்களையுமே வெறுப்பால் விளைந்த குற்றச்செயல்களாக வகைப்படுத்தவில்லை.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பண்ணையில் நடந்த துப்பாக்கிச்சூடு வேலையிட வன்முறைபோல் தோன்றுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சந்தேக நபர் சுன்லி சாவ், பண்ணையில் பணிபுரியும் ஊழியர். தான் வேலையிடத் துன்புறுத்தலுக்கு ஆளானதாக விசாரணையில் அவர் குறிப்பிட்டார்.
சான் ஃபிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தின் அறிக்கை வெளியான மூன்று மணி நேரத்தில், 'வெய்போ' சமூக ஊடகத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முறை அது பார்க்கப்பட்டது.
வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலிஃபோர்னியா துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
"ஒரு நாடாக நாங்கள் அனைவரும் உங்களுக்குத் துணைநிற்போம்," என்று அவர் கூறினார்.
மொன்டரே பார்க் சம்பவத்திற்குப் பிறகு இரண்டாவதாகத் தாக்குதல் நடந்த முனைந்த துப்பாக்கிக்காரரைத் தடுத்து நிறுத்திய பிரண்டன் சாய் என்பவருடன் தாம் பேசியதாக அதிபர் பைடன் கூறினார்.
முதலில் தான் இறக்க நேரிடும் என்று நினைத்த பிரண்டன் பின்னர் உள்ளே இருந்த மக்களை நினைத்துப் பார்த்ததாகக் குறிப்பிட்டதைக் கூறிய அவர், "சில நேரங்களில் வியக்கத்தக்க துணிச்சலான நடவடிக்கைகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம்," என்றார்.

