தாய்லாந்தின் தென்பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலேசிய ஆடவர், சென்ற புதன்கிழமை படகு கவிழ்ந்ததில் கர்ப்பிணியாக இருந்த மனைவியையும் ஆறு வயது மகளையும் பறிகொடுத்தார்.
சென்ற புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கிராபி பகுதியின் 'போடா' தீவுக்கு அவர்கள் சென்ற நீண்ட படகு கவிழ்ந்ததாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.
பெரிய அலைகள் மோதியதால் அப்படகு கவிழ்ந்திருக்கக்கூடும் எனக் கருதுவதாக கிராபி மாநில ஆளுநர் பசகோன் புன்யலாக் கூறினார்.
"கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்கள் மூவருடன் படகோட்டியையும் உள்ளூர் மீனவர் ஒருவர் மீட்டார்.
அதையடுத்து நால்வரும் கிராபி மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டனர்," என்று செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறினார்.
விபத்தில் கவிழ்ந்த படகைச் செலுத்திய 45 வயது படகோட்டி, சுற்றுப் பயணிகளில் 38 வயது மலேசிய ஆடவர் கான் கா செங் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
மீன்பிடிக்கச் செல்கையில் திடீரென்று மழை பெய்து பலத்த காற்று வீசியதால் கரை திரும்பிய 21 வயது மீனவர் வாரிட் சாங்மின், கடலில் தத்தளித்த நால்வரையும் தனது படகிற்கு இழுத்துக் காப்பாற்றினார்.
அப்போதே கர்ப்பிணிப் பெண்ணும் அவரது ஆறு வயது மகளும் சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மலேசிய மாது, அவரது மகள் இருவரின் நல்லுடல்களைத் தாயகம் கொண்டுவர சொங்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் உதவி செய்து வருகிறது.

