நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம், பெயர், குரல், அடையாளம் எதையுமே அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மீறி பயன்படுத்தினால் சிவில், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் இளம்பாரதி பொதுநல அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"இந்த அறிவிப்பு சென்னை போயஸ்கார்டன் முகவரியில் வசித்த வரும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வெளியிடப்படுகிறது.
"ரஜினிகாந்தின் பெயர், குரல், புகைப்படம் ஆகியவை சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
"மேலும், அவரின் சூப்பர் ஸ்டார் அடையாளத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் சிலர் பிரபலமாக முயல்கிறார்கள். இதுபோன்று அவரின் அனுமதியில்லாமல், சமூக வலைத்தளங்கள், பிற தளங்களில் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும்.
"ரஜினிகாந்த் மட்டுமே தன்னுடைய பெயர், குரல், புகைப்படம், அடையாளத்தை வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதிக்காமல் இருக்கிறார்.
"எனவே அவரின் தனித்தன்மையை வர்த்தகப் பயன்பாட்டுக்கு யாராவது பயன்படுத்தினால் அவர்கள்மீது, சிவில் மற்றும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்தின் பெயர், புகைப்படங்கள், குரலை அவரது அனுமதியின்றிப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது. இந்த நிலையில் அதனைத் தடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

