நிதிக் கையாடல் தொடர்பான சந்தேகம் எழுந்ததை அடுத்து, பெர்சத்து கட்சியின் வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இரண்டு வாரங்களுக்கு முன்பு முடக்கியது.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கும்படி கோரிக்கை விடுக்க இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மலேசி யாவின் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் நேற்று கூறினார். தமது கட்சியின் நிதிப் பரிவர்த்தனைகள் முறையானவை என்று தம்மால் உறுதியாகக் கூற முடியும் என்று திரு முகைதீன் தெரிவித்தார்.
"பெர்சத்து கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் சட்டத்துக்கு உட்பட்டு பெறப்பட்டது. எனவே முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கும்படி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்குக் கடிதம் அனுப்ப இருக்கிறோம்," என்று மலேசிய ஊடகத்திடம் திரு முகைதீன் தெரிவித்தார்.
கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் கட்சியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"எங்கள் வங்கிக் கணக்குகளை ஆணையம் மூன்று மாதங்களுக்கு முடக்கினால் எங்களுக்கு மிகவும் சிரமமாகி
விடும். எங்கள் அதிகாரிகளுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் போய்விடும். அலுவலங்களுக்கான வாடகையையும் செலுத்த முடியாது. இது கட்சியின் நிர்வாகத்தை வெகுவாகப் பாதிக்கும். அதுமட்டுமல்லாது, மலேசியாவில் இருக்கும் மிக முக்கியமான கட்சி என்று பெர்சத்துக்கு இருக்கும் நிலையும் பெயரும் பாதிப்படையும்," என்றார் திரு முகைதீன்.

