உலகெங்கும் உள்ள முருக பக்தர்களால் தைப்பூசத் திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.
மலேசியாவின் பல பகுதிகளில் தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டம் இடம்பெற்றாலும் பத்துமலை ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரள்வது வழக்கம்.
கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு பெரிய அளவில் இவ்வாண்டு இடம்பெறும் பத்துமலை தைப்பூச விழாவின் நான்கு நாள் கொண்டாட்டங்களிலும் 1.6 மில்லியன் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆலயக் குழுச் செயலாளர் சி. சேதுபதி கூறியுள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராகிமும் சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருதீன் ஷாரியும் பத்துமலை தைப்பூச விழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமராக திரு அன்வார் இப்ராகிம் இந்த விழாவில் பங்கேற்பது இது முதல்முறை.
அதேபோல ஜோகூர் மாநிலத்தின் ஸ்கூடாய் அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற இருக்கும் தைப்பூச விழாவில் ஜோகூர் சுல்தான்
இப்ராகிம் இஸ்கந்தார் முதல் முறையாகக் கலந்துகொள்ள இருக்கிறார்.
இதனை இந்த ஆலயத்தின் தலைவர் எஸ் பாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தி உள்ளார்.
"சுல்தான் அவர்கள் காலை 11 மணிக்கு தைப்பூச விழாவில் பங்கேற்க ஆலயத்திற்கு வருவார்.
"மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் விழாவில் சுல்தானுடன் பங்கேற்பர்.
"கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் இவ்வாண்டு தைப்பூச விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
"ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழா நிகழ்ச்சிகளில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்," என்று திரு எஸ் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்னர், 2019ஆம் ஆண்டு வடி ஹானாவில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோயில் விழாவில் ஜோகூர் சுல்தான் பங்கேற்றுச் சிறப்பித்தார்.