காவடிகள் வலம்வந்த தைப்பூசப் பெருவிழா

மோன­லிசா

ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு கொவிட்-19 கட்டுப்­பா­டு­கள் முழு­வ­து­மாக தளர்ந்த நிலை­யில், தைப்­பூ­சத் ­திரு­விழாவில் உற்சாகமும் பக்திப் பரவசமும் பெருக்கெடுத்தன. காவ­டி­ ஊர்வலம் இவ்வாண்டு அனு­ம­திக்­கப்­பட்­ட­தை­ அ­டுத்து பக்­தர்­கள் மிகுந்த ஆர்­வத்­துடனும் பக்தியோடும் தைப்பூசத்தைக் கொண்டாடினர்.

முதல் காவடி நேற்று முன்தினம் இரவு மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப்­பெ­ரு­மாள் கோயி­லி­லி­ருந்து ஸ்ரீ தெண்­டா­யு­த­பாணி கோயி­லுக்குப் புறப்­பட்­டது. பால்­கு­டங்­கள் நேற்று முன்­தி­னம் இரவு 11.30 மணி­ய­ள­வில் கிளம்பின. ஏறக்­கு­றைய 35,000ற்­கும் மேற்­பட்டவர்கள் தி­ரு­வி­ழா­வில் கலந்­து­கொண்­ட­னர் என்று இந்து அறக்­கட்­டளை வாரி­யம் தெரி­வித்­தது.

காலையில் வானம் தெளிவாக இருந்ததால் காவடி ஊர்வலம் சுமூகமாக நடைபெற்றது. ஆனால், பிற்பகலுக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை, மாலையில் வலுத்தது. அதனால், காவடி ஊர்­வ­லம் ஒரு மணி நேரம் தாம­தமாகி, கடைசிக் காவடி ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப்­பெ­ரு­மாள் கோயி­லி­லி­ருந்து புறப்­பட கிட்டத்தட்ட மாலை 6 மணி ஆகிவிட்டது.

எனினும், அடை மழையும் தொடர்ந்த தூறலும் ­பக்­தர்­களின் உற்­சா­கத்தைக் குறைக்கவில்லை. குடை பிடித்தும் பிடிக்காமலும் பக்தர்கள் பால் குடங்களும் காவடிகளும் சுமந்து சென்று தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

பால் குடம் சுமந்தவர்களில் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங்கும் ஒருவர். அவர் ஸ்ரீதெண்­டா­யு­த­பாணி கோயி­லில் பால்­கு­டம் ஏந்­திச் சென்று முரு­கன் சந்­நி­தி­யில் சமர்ப்­பித்­தார்.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப்­பெ­ரு­மாள் கோயி­லுக்கு நேற்று காலை 8 மணி­ய­ள­வில் வருகை தந்த டாக்­டர் டான் சீ லெங், “தடை­க­ளைக் கடந்து சிறப்­பான முறை­யில் இன்று அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கொண்­டா­டும் இவ்­விழா நாம் பெரும்­ து­ய­ரி­லி­ருந்து மீண்டு வந்­த­தன் வெற்­றி­யைக் குறிக்­கிறது,” என்று கூறினார்.

சிறு­வ­னாக இருந்தபோது தைப்­பூ­சத் திரு­வி­ழா­வில் காவ­டி­களை ஆவ­லு­டன் வேடிக்கை பார்த்த தரு­ணங்­களை நினை­வு­கூர்ந்தபோது அவரிடம் அந்தக் குதூகலம் மீண்டிருந்தது. ஒரு சீன பக்தர் பால்­கு­டம் சுமந்து சென்றதைக் குறிப்பிட்ட அவர், சிங்­கப்­பூ­ரின் பல இன பல சமய மக்­க­ளின் நல்­லி­ணக்­கத்­தை­யும் பிணைப்­பை­யும் இது பிர­தி­ப­லிக்­கிறது என்­றார்.

தைப்­பூ­சம் குறித்து பிர­த­மர் லீ சியன் லூங் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டி­ருந்­தார்.

“பல இன பல சம­யங்­களை சார்ந்த சமூ­க­மான சிங்­கப்­பூ­ரில் வெவ்­வேறு இனப் பண்­டி­கை­கள் ஒரே தினத்­தில் வரு­வது அரி­தல்ல. இந்­துக்­கள் தைப்­பூ­சத் திரு­விழாவை கொண்­டா­டும் இதே தினத்­தில் சீனப் புத்­தாண்­டின் நிறைவுநாளும் கொண்­டா­டப்­ப­டு­கிறது. கொண்­டாட்ட உணர்வைத் தூண்­டும் இப்­பண்­டி­கை­கள் மக்­க­ளுக்­குள் ஒரு­மைப்­பாட்­டை­யும் வளர்க்­கும்,” என்­று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த பத்­தாண்­டு­களில் இல்­லாத அள­வில் ஆக அதி­க­மாக 13,002 பால்­கு­டங்­கள் எடுக்­கப்­பட்­ட­தாக கோயில் நிர்­வா­கம் தெரி­வித்­தது. மேலும் 180 அல­குக் காவ­டி­களும் 34 ரதக் காவ­டி­களும் 216 பால்­ கா­வ­டி­களும் 26 தொட்­டில் காவ­டி­களும் எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் ஏற்­பாட்­டுக்­குழு தெரி­வித்­தது.

“தைப்­பூ­சத் திரு­விழா ஈராண்­டு­க­ளுக்கு பிறகு மிகப் பெரிய அளவில் நடை­பெ­று­வ­தாலும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் அமைந்­த­மை­யா­லும் அதிக அள­வில் பக்­தர்­கள் பங்­கேற்­றுள்­ள­னர்,” என்று கூறி­னார் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலை­வர் ஆர் ஜெயச்­சந்­தி­ரன்.

“உணவு, தண்­ணீர், மருத்­துவ வசதி, கூட்ட நெரி­சல் கட்­டுப்­பாடு உள்­ளிட்ட அனைத்து தேவை­க­ளுக்­கு­மான ஏற்­பா­டு­கள் தயார்நிலை­யில் இருந்­தன. கூடு­த­லாக 1,300 தொண்­டூ­ழி­யர்­களும் கோயில் பணி­யா­ளர்­களும் தைப்பூசத் ­தி­ரு­விழா இனிதே நடை­பெற துணை நின்­ற­னர்,” என்று இந்து அறக்­கட்­டளை வாரிய தலைமை நிர்­வாக அதி­காரி திரு த.ராஜ­சே­கர் கூறி­னார்.

“ஸ்ரீதெண்­டா­யு­த­பாணி கோயி­லில் சீர­மைப்­புப் பணி­கள் நடை­பெற்­று­வ­ரும் நிலை­யில், பக்­தர்­கள் தற்­கா­லிக சந்நி­தி­களில் காணிக்கை செலுத்தி மிகுந்த ஒத்­து­ழைப்பை நல்­கி­யது நன்­மு­றை­யில் திரு­விழா நடை­பெற பெரி­தும் உத­வி­யது,” என்று ஸ்ரீதெண்­டா­யு­த­பாணி கோயில் துணைத்­த­லை­வர் ராம­சாமி மெய்­யப்­பன் கூறி­னார்.

- மேலும் செய்தி பக்கம் 2ல்

monolisa@sph.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!