துருக்கியில் நேற்று ஒரே நாளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முதல் நிலநடுக்கம் நேற்று அதிகாலை துருக்கியையும் சிரியாவையும் உலுக்கியது. அது ரிக்டர் அளவில் 7.9ஆகப் பதிவானது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து, துருக்கியின் அதே
பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 7.6ஆகப் பதிவானது.
நேற்றிரவு நிலவரப்படி நில
நடுக்கம் காரணமாக குறைந்தது 1,400 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 6,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிரியாவில் அலெப்போ, லட்டாக்கியா, ஹமா, டார்டஸ் ஆகிய பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே, இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கி இருப்பதாகவும் அவர்களை
மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
துருக்கியிலும் சிரியாவிலும் தற்போது பனிக்காலம் என்பதால் கடுங்குளிரில் நிலநடுக்கம்
உலுக்கியிருப்பது கூடுதல்
சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை இருள் சூழ்ந்திருக்க, பலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. சைப்ரஸ், லெபனான் ஆகிய நாடுகளிலும்
அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிரியா தலைநகர் டமாஸ்கசில் மக்கள் பீதி அடைந்து வீடுகளிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புப் பணியாளர்களையும்
அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் விமானங்களையும் துருக்கிய அதிகாரிகள் உடனடியாக அனுப்பிவைத்தனர். நிலைமை மோசமாக இருப்பதால் அனைத்துலக உதவியையும் துருக்கி நாடியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிப்போருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை துருக்கிய அதிபர் ரெசப் தயீப் எர்டோவான் தெரிவித்துக்கொண்டார். இந்நிலையில், நில
நடுக்கத்தால் நிலைகுலைந்திருக்கும் துருக்கிக்கும் சிரியாவுக்கும் உதவ அனைத்துலக அமைப்புகள் முன்வந்துள்ளன.
நிலநடுக்கம் காரணமாக
துருக்கியிலும் சிரியாவிலும் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் உயிர்ச் சேதத்துடன் பொருள் சேதமும் ஏற்பட்டது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்போரைத் தேடும் பணி தொடர்கிறது,
படம்: ஏஎஃப்பி

