கண்ணாடிக் கதவு விழுந்து ஆடவர் உயிரிழப்பு

1 mins read
5b0fe794-7e4d-4c69-b34e-add52eccec6a
அலெக்சாண்டிரா டெரஸ் ஹார்பர் லிங்க் காம்ப்ளக்சில் இம்மாதம் 2ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. படம்: கூகல்மேப் -

அலெக்சாண்டிரா சேமிப்புக்கிடங்கில் கண்ணாடிக் கதவுகளை இறக்கியபோது ஆடவர் மூவர்மீது ஒன்பது கதவுகள் விழுந்ததில் காயமடைந்த 53 வயது சிங்கப்பூரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அம்மூவரில் இருவர் காயமடைந்த நிலையில், அவ்விருவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். காயமுற்ற இன்னோர் ஊழியரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இவ்வாண்டில் வேலையிட விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துவிட்டது.

61, அலெக்சாண்டிரா டெரஸ் ஹார்பர் லிங்க் காம்ப்ளக்ஸ் எனும் முகவரியில் இம்மாதம் 2ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.

விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது வேலை நடவடிக்கைகளை நிறுத்திவைக்குமாறும் அந்நிறுவனத்தின் வேலை நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தணிக்கை அதிகாரி ஒருவரை நியமனம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து அமைச்சு விசாரித்து வருகிறது.