துருக்கியையும் சிரியாவையும் கடந்த திங்கட்கிழமை அன்று தாக்கிய நிலநடுக்கத்தில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 11,000ஐத் தாண்டியுள்ளது.
துருக்கியில் 8,754 பேர் நில நடுக்கத்தில் மாண்டதாக அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகன் கூறினார். சிரியாவில் 2,662 பேர் மாண்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மாண்டோர் எண்ணிக்கை 20,000ஐ தாண்டலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தில் இரண்டு நாடுகளிலும் 6,000க்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. நிலநடுக்கம் நடந்து 50 மணி நேரத்துக்குப் பின்னர் குடும்பங்களும் சிறுவர் சிறுமியரும் கட்டட இடிபாடு களிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
ஆனால், மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெறுவதால் துருக்கியில் மக்கள் கோபமடைந்துள்ளனர். சிலர் உதவிக்கு யாருமின்றி தங்கள் உறவினர் களைத் தாங்களே தேடிவருவதாகக் கூறினர்.
நிலநடுக்கத்தில் உயிர்தப்பியவர்கள் நேற்று மூன்றாவது இரவை வெளியில் கழித்தனர். சிலர் கார்களுக்கு அடியிலும் வீதி களிலும் படுத்து உறங்கினர். நிலநடுக்கத்தில் போகாத உயிர், கடும் குளிராலும் பசியாலும் போய்விடும் என்று அங்குள்ள சிலர் அங்கலாய்த்தனர்.
நிலநடுக்கம் மையம் கொண்ட கஹரமன்மரஸ் மாநிலத்துக்கு நேற்றுச் சென்ற அதிபர் எர்டோகன் முதல் நாளில் பிரச்சினைகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். சாலைகளிலும் விமான நிலையங்களிலும் ஏற்பட்ட சேதமே அதற்குக் காரணம் என்றார் அவர். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு இன்னும் ஓராண்டுக்குள் வீடு கட்டித்தரப்படும் என்று அவர் உறுதிகூறியுள்ளார்.
இந்நிலையில் சிரியா மீட்புப் பணிகளில் உதவும்படி ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள துருக்கிய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருள்களை நன்கொடை அளிக்கும்படி இங்குள்ள பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நன்கொடை அளிக்கப்படும் பொருள்கள் துருக்கிக்கும் சிரியாவுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று அது தெரிவித்தது.
பெரியவர்களுக்கும் சிறுவர்க்கும் குளிர்கால ஆடைகள், கூடாரங்கள், பிள்ளைகளுக்கான டையபர்கள், மகளிருக்கான சுகாதாரப் பொருள்கள், கெட்டுப்போகாத உணவுவகைகள் உள்ளிட்ட 16 பொருள்களை அதன் சமூக ஊடகத் தளங்களில் அது பட்டியலிட்டுள்ளது.
எஸ்ஜிஎக்ஸ் சென்டர், 2 ஷெண்டன் வே, #10-03 எனும் முகவரியில் உள்ள தூதரக வளாகத்தில் பொருள்களை நேரடியாகவோ அஞ்சல் வழியாகவோ ஒப்படைக்கலாம்.

