கணிக்கமுடியாமல் மாறிக்கொண்டிருக்கும் பருவநிலையால் மலேசியாவின் கேமரன் மலையில் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறித் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை இரட்டிப்பாகியுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரை வழக்கமாக மழை பெய்யாது என்று கேமரன் மலை காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சே ஈ மொங் தி ஸ்டார் நாளிதழிடம் நேற்று முன் தினம் கூறினார்.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட எல்லாநாளும் மழை பெய்து வருகிறது. அதனால், தக்காளி, மிளகாய், வெண்டிக்காய், பயிற்றங்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பருவமழைக்குப் பிறகு காய்கறிகள் நன்கு வளரும். ஆனால் தொடர் மழை, மேகமூட்டம், குளிர் ஆகியவற்றால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டதாக திரு சே சொன்னார்.
செடிகொடிகள் வளர்ந்தபோதும் காய் காய்க்கவில்லை என்றும் காய்கறி விளைச்சல் 50 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் திரு சே தெரிவித்தார்.
கீரை வகைகளும் நல்ல தரத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதிக ஈரத்தன்மை, நோய்கள் போன்றவற்றால் விளைச்சல் பொய்த்துள்ளது அல்லது காய்கறிகள், கீரைகள் நல்ல தரத்தில் இல்லை என்றார் அவர்.
பஹாங், ஜோகூர் ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், காய்கறி விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திரு சே சொன்னார்.
சில காய்கறிகளின் விலை 40 விழுக்காடு அதிகமாகவும் சில 100 விழுக்காடுக்கும் அதிகமாகவும் கூடியுள்ளதாக திரு சே குறிப்பிட்டார்.