இலங்கை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நொடித்திருக்கும் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். கடந்த ஆண்டு பதவியேற்ற திரு ரணில் இலங்கையில் இதுவரை இல்லாத பொருளியல் நெருக்கடிக்குத் தீர்வுதேடி அரசாங்கத்தின் நிதி நிலைமையைச் சரிசெய்ய முயன்று வருகிறார்.
வரிகளை உயர்த்தியதுடன், அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து கடன்பெற அமைப்புடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமது பொருளியல் சீர்திருத்தத் திட்டங்களின்படி நடந்தால், 2026ஆம் ஆண்டுக்குள் இலங்கை நொடித்துப் போன நிலையிலிருந்து மீட்சி அடையும் என்று அதிபர் ரயில் தெரிவித்தார். கடந்த ஆண்டு இலங்கைப் பொருளியல் 11 விழுக்காடு சரிந்திருக்கலாம் என்று ஏற்கெனவே அவர் கூறியிருந்தார். ஆனால் புதிய நிதிக் கொள்கைகள் வழியாக வருவாய் ஈட்டப்பட்டு இவ்வாண்டு இறுதிக்குள் பொருளியல் வளர்ச்சி திரும்பும் என்றும் அவர் நேற்று கூறினார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, 2022 ஆர்ப்பாட்டங்களின்போது நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றபோது, அவரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 17 மில்லியன் இலங்கை ரூபாயின் (S$61,608.30) தொடர்பில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
திங்கட்கிழமை அன்று மூன்று மணி நேரத்துக்கு அவர் விசாரிக்கப்பட்டதாக இலங்கை காவல்துறை கூறியது.

