பிப்ரவரி 13 முதல் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை
மோனலிசா
சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முதல் எஞ்சியுள்ள அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன. பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை.
இருப்பினும், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், தாதிமை இல்லங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து முகக்கவசம் அணிய சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் அனைத்துலக அளவிலும் உள்ளூர் அளவிலும் சீராக உள்ளது என்றும் அந்நோய் மக்களுக்கு லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் நிலையில், 'டோர்ஸ்கான்' விழிப்புநிலைக் குறியீடு மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்குக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் நீண்டகால வருகை அனுமதி வைத்திருப்போருக்கும் குறிப்பிட்ட சில குறுகியகால வருகை அனுமதி வைத்திருப்போருக்கும் தடுப்பூசிகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.
ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் குறைந்தபட்ச பாதுகாப்பாக மூன்று டோஸ் 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசி அல்லது நோவாவேக்ஸ் தடுப்பூசி, அல்லது நான்கு டோஸ் சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
மேலும், குறிப்பிட்ட சில பிரிவினர் ஆண்டுதோறும் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுவர் என்றும் பணிக்குழுவின் இணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான திரு ஓங் யி காங் தெரிவித்தார்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், கொவிட்-19 நோய்க்கான சிகிச்சைக்கு முழு மானியம் வழங்கப்படாது. கொவிட்-19 பரிசோதனைக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்.
வரும் திங்கட்கிழமை முதல் எல்லைக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளன. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் சிங்கப்பூருக்கு வரும்போது பயணத்துக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனை முடிவைக் காட்டத் தேவையில்லை. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குறுகியகால வருகை அனுமதியுடன் வருவோர் கொவிட்-19 பயணக் காப்புறுதியைப் பெறத் தேவையில்லை.
இதற்கிடையே, வெளிநாட்டு ஊழியர்களும் வரும் திங்கட்கிழமை முதல் எவ்வித சமூகக் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ளமாட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் பிரபலமான நான்கு இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 'பிரபலமான இடங்கள் அனுமதி' முறை நீக்கப்படும்.
மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல், வெளிநாட்டு ஊழியர்கள் சிகிச்சை நிலையங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக தங்களுடைய தங்குவிடுதிகளிலேயே தங்கி கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடையலாம்.
டிரேஸ்டுகெதர், சேஃப்என்ட்ரி உள்ளிட்ட தொடர்புகளைக் கண்டறியும் முறை இனி செயல்பாட்டில் இருக்கமாட்டா. பொதுமக்களும் வர்த்தகங்களும் இச்செயலிகளை கைப்பேசிகளிலிருந்து நீக்கிக்கொள்ளலாம்.
வரும் 13ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை டிரேஸ்டுகெதர் கருவிகளை 108 சமூக மன்றங்களிலும் திரும்பத் தரலாம்.
மேலும், டிரேஸ்டுகெதர், சேஃப்என்ட்ரி மூலம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் சுகாதார அமைச்சு அதன் தரவுத்தளங்களிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோய்ப்பரவல் சூழலைச் சமாளிப்பதற்காக அமைக்கப்பட்ட கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவும் வரும் திங்கட்கிழமையுடன் கலைக்கப்படும்.
தொடர்ந்து கொவிட்-19 சூழலைச் சமாளிக்கும் பொறுப்பை சுகாதார அமைச்சு ஏற்கும் என்றும் எதிர்காலத்தில் நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்தால் மீண்டும் இப்பணிக்குழு செயலில் இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பணிக்குழுவின் இணைத் தலைவரும் துணைப் பிரதமருமான திரு லாரன்ஸ் வோங், அரசாங்கத்தின் பெருந்தொற்று நிர்வாகக் கட்டமைப்பும் நடைமுறைகளும் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றார்.
"பணிக்குழு தற்காலிகமாக கலைக்கப்படுகிறது. ஆனால், சிங்கப்பூர் தொடர்ந்து உயர் விழிப்புநிலையிலும் தயார்நிலையிலும் இருக்கும். எந்த நேரமும் தேவை ஏற்படும்போது பணிக்குழு மீண்டும் செயலில் இறங்கும்," என்றார் அவர்.
வருங்கால நெருக்கடிகளுக்குத் தயார்செய்துகொள்ள சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.
இந்நிலையில், கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வது நீண்ட, கடினமான பயணமாகவும் இதில் பல எதிர்பாராத திருப்பங்கள் நிலவியதாகவும் பிரதமர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
"ஒரு தலைமுறையின் இந்த நெருக்கடி, நமது வாழ்க்கையை ஆட்டிப்படைத்து, உலகைப் பெரிதும் மாற்றியுள்ளது. ஆனாலும், ஒன்றுபட்டு செயல்பட்டதன் மூலம் நாம் பெருந்தொற்றைப் பாதுகாப்பாகக் கடந்து வந்துள்ளோம்.
"இந்தப் பயணம் முழுவதும் நாம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து, நம்பிக்கை கொண்டிருந்தோம். மேலும் வலுவாகவும் மீள்திறனுடனும் நாம் எழுந்துள்ளோம். இது கடும் உழைப்பால் ஏற்பட்ட சாதனை," என்றார் பிரதமர் லீ.

