துருக்கியில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகளில் உதவ அந்நாட்டிற்குச் சென்றுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக் குழுவினர், இடிபாடுகளில் இருந்து சிறுவன் ஒருவனை நேற்று முன்தினம் மீட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதியான காராமன்மராஸ் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் அச்சிறுவன் கண்டறியப்பட்டான். கடுங்குளிரிலும் உள்ளூர், ஸ்பானிய மீட்புக் குழுவினருடன் சேர்ந்து மூன்று மணி நேர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், அச்சிறுவனை மீட்டதாக குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
ஸ்பானிய மீட்புப் படையினர், அச்சிறுவன் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க சிறப்புத் தேடுதல் கருவியைப் பயன்படுத்தினர். அச்சிறுவனின் அடையாளத்தைக் கண்டறிய குடிமைத் தற்காப்புப் படையினர் கண்ணாடியிழை கருவியைப் பயன்படுத்தினர்.
இடிபாடுகளுக்கு மத்தியில் அச்சிறுவனைச் சென்றடைய மீட்புப் படையினர் இடிபாடுகளை உடைத்தெடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தினர். உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4.45 மணி) அச்சிறுவன் மீட்கப்பட்டான்.
முன்னதாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த 20 அதிகாரிகள் அடங்கிய குழுவினர், துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அடானா நகரில் தரையிறங்கினர். பின்னர் தேடுதல், மீட்புப் பணியைத் தொடங்க காராமன்மராஸ் நகருக்கு அவர்கள் சென்றனர்.
குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மேலும் 48 அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு, அந்த 20 பேருடன் சேர்ந்து பணியாற்ற இருப்பதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியிலும் அதன் அண்டை நாடான சிரியாவிலும் 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
கடுங்குளிர் சூழல் காரணமாக மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கித் தவிப்பதால் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய அரசாங்கத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் பிரச்சினை இருந்ததை துருக்கி அதிபர் ரெச்சப் தய்யிப் எர்துவான் கூறினார்.

