நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய சிறுவனை சிங்கப்பூர் மீட்புப் படையினர் மீட்டனர்

2 mins read
c4c66aa0-27d6-4311-b8d7-2bce3119615e
-

துருக்­கி­யில் கடந்த திங்­கட்­கிழமை நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து அங்கு மீட்­புப் பணி­களில் உதவ அந்­நாட்­டிற்­குச் சென்­றுள்ள சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக் குழு­வி­னர், இடி­பா­டு­களில் இருந்து சிறு­வன் ஒரு­வனை நேற்று முன்­தி­னம் மீட்­ட­னர்.

நில­ந­டுக்­கம் ஏற்­பட்ட மையப் பகு­தி­யான காரா­மன்­ம­ராஸ் நக­ரில் கட்­ட­டம் ஒன்று இடிந்து விழுந்­தது. அதன் இடி­பா­டு­களில் அச்­சி­று­வன் கண்­ட­றி­யப்­பட்­டான். கடுங்­கு­ளி­ரி­லும் உள்­ளூர், ஸ்பா­னிய மீட்­புக் குழு­வி­ன­ரு­டன் சேர்ந்து மூன்று மணி நேர மீட்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்ட சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யினர், அச்­சி­று­வனை மீட்­ட­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

ஸ்பா­னிய மீட்­புப் படை­யி­னர், அச்­சி­று­வன் இருந்த இடத்­தைக் கண்­டு­பி­டிக்க சிறப்­புத் தேடு­தல் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­தி­னர். அச்சி­று­வ­னின் அடை­யா­ளத்­தைக் கண்­ட­றிய குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் கண்­ணா­டி­யிழை கருவி­யைப் பயன்­ப­டுத்­தி­னர்.

இடி­பா­டு­க­ளுக்கு மத்­தி­யில் அச்­சி­று­வ­னைச் சென்­ற­டைய மீட்புப் படை­யி­னர் இடி­பா­டு­களை உடைத்­தெ­டுக்­கும் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னர். உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் இரவு 11.45 மணி­ய­ள­வில் (சிங்­கப்­பூர் நேரப்­படி அதி­காலை 4.45 மணி) அச்­சி­று­வன் மீட்­கப்­பட்­டான்.

முன்­ன­தாக, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த 20 அதி­கா­ரி­கள் அடங்­கிய குழு­வி­னர், துருக்­கி­யின் தெற்­குப் பகு­தி­யில் உள்ள அடானா நக­ரில் தரை­யி­றங்­கி­னர். பின்­னர் தேடு­தல், மீட்­புப் பணி­யைத் தொடங்க காரா­மன்­ம­ராஸ் நக­ருக்கு அவர்­கள் சென்­ற­னர்.

குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த மேலும் 48 அதி­கா­ரி­கள் அடங்­கிய மற்­றொரு குழு, அந்த 20 பேரு­டன் சேர்ந்து பணி­யாற்ற இருப்­ப­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

சக்­தி­வாய்ந்த இந்த நில­ந­டுக்­கம் கார­ண­மாக துருக்­கி­யி­லும் அதன் அண்டை நாடான சிரி­யா­வி­லும் 17,000க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

கடுங்­கு­ளிர் சூழல் கார­ண­மாக மீட்­புப் பணி­க­ளுக்கு இடை­யூறு ஏற்­பட்­டுள்­ளது. இடி­பா­டு­களுக்கு அடி­யில் இன்­னும் பலர் சிக்­கித் தவிப்­ப­தால் மரண எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, நில­ந­டுக்­கத்­தால் ஏற்­பட்ட பாதிப்­பைச் சரி­செய்ய அர­சாங்­கத்­தின் ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­களில் பிரச்­சினை இருந்­ததை துருக்கி அதி­பர் ரெச்சப் தய்­யிப் எர்துவான் கூறி­னார்.