மலேசியாவின் கெந்திங் மலையில் நேற்று முன்தினம் வளைவு நெளிவான சாலையில் சென்றுகொண்டிருந்த வாடகை வேன் சாலைத் தடுப்பின்மீது மோதிய விபத்தில் எழுவர் உயிரிழந்தனர். குறைந்தது எட்டுப் பேருக்குக் காயம் ஏற்பட்டது.
அந்த வேனின் இரு ஓட்டுநர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டதாக பாகாங் காவல்துறைத் தலைவர் ராம்லி முகம்மது யூசோஃப் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 1.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது அந்த வேனில் 14 பேர் இருந்ததாக திரு ராம்லி கூறினார்.
உயிரிழந்தவர்களில் இருவர் ஆடவர், ஐவர் மாதர்கள் என்றார் அவர்.
கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அறுவரில் வேன் ஓட்டுநர் சாங் தேம் கோங், 70, என்பவரும் அடங்குவார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
மற்ற இருவர் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், பின்னர் தெமர்லோ மருத்துவமனைக்கு அவர்கள் மாற்றிவிடப்பட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அறுவர் இறந்துவிட்டனர்.
பினாங்கிலிருந்து கெந்திங் மலைக்கு அந்த வேன் சென்றதாக திரு ராம்லி குறிப்பிட்டார். அந்த வேனில் 12 மாதர்களும் இரு ஆண் வேன் ஓட்டுநர்களும் இருந்தனர்.
"கெந்திங் மலையிலிருந்து வளைவு நெளிவான சாலையில் கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது சாலைத் தடுப்பின்மீது வேன் மோதியது," என்றார் திரு ராம்லி.

