ரயில் பசுமைப் பாதையில் கிராஞ்சி ரயில் நிலையத்திற்கும் ஹில்வியூ ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதி மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
பசுமை ரயில்பாதையின் ஏறக்குறைய ஆறு கிலோமீட்டருக்கு மேற்பட்ட பகுதி மேம்பாடு கண்டுள்ளது.
இதனுடன், பொதுமக்கள் தற்போது 21 கிலோமீட்டருக்கு மேற்பட்ட, தொடர்ச்சியான நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வடக்கே கிராஞ்சி ரயில் நிலையத்தில் தொடங்கி தெற்கே தஞ்சோங் பகாருக்கு அருகே ஸ்பூனர் ரோடு வரை இந்தப் பாதை நீள்கிறது.
தேசியப் பூங்காக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் நேற்று இந்தத் தகவல்களை வெளியிட்டன.
மேம்படுத்தப்பட்ட இப்பாதையின் சிறப்பம்சங்களில் ஒன்று ஹில்வியூ ரோட்டுக்கு மேலே அமைந்துள்ள பாலம். ஹில்வியூ ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள இப்பாலம் ஆறு மீட்டர் உயரமும் 28.8 மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் அகலமும் கொண்டது.
பழைய ரயில் தட - சாலைச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் அதில் ரயில் தடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
பாலத்தில் இருந்து சிறிது தொலைவில் ஆறு மீட்டர் உயரப் பார்வையாளர் மாடம் அமைந்துள்ளது. அங்கிருந்து புக்கிட் தீமா இயற்கைப் பூங்கா, பால் பண்ணை இயற்கைப் பூங்கா, புக்கிட் தீமா குன்று ஆகியவற்றைப் பார்வையிட இயலும்.
நேற்று நடைபெற்ற திறப்புவிழா நிகழ்ச்சியில், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார்.
ரயில் பசுமைப் பாதை சிங்கப்பூரின் வடக்கு, தெற்குப் பகுதிகளைத் தொடர்ச்சியாக இணைக்கும் பசுமைத் தொடர்பு என்று குறிப்பிட்டார்.
எளிதில் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள இப்பாதை மக்களை இயற்கைக்கு அணுக்கமாகக் கொண்டுசெல்ல உதவும் என்றார் அவர்.
பாதையின் ஏறக்குறைய ஆறு கிலோமீட்டர் நீளம் கல் சுரங்கத் தூசால் உருவாக்கப்பட்டது. அதன்மேல் புற்கள், சிறு கற்கள் ஆகியவை பரப்பப்பட்டுள்ளன.
இது வருகையாளர்கள் பாதுகாப்பான முறையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள உதவும். அருகில் அமைந்திருக்கும் வனவிலங்குகள் வசிப்பிடத்திற்கு இடையூறு ஏற்படுவதையும் இது குறைக்கும் என்று கூறப்பட்டது.

