எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் அதன் முதல் பொது அவசரகால தயார்நிலை பயிற்சியை நேற்று நடத்தியது. இந்த அவசரகாலப் பயிற்சி புரோமினாட் எம்ஆர்டி ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் நடைபெற்றது.
இதில் ஹுவா சோங் கல்விக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என 40 பேர் பங்கெடுத்தனர். ஆறு மாடி உயரமுள்ள சுரங்கவாயிற்குழியைப் பயன்படுத்தி தப்பிக்கும் முறை குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவசரகாலத்தில் சுரங்கப் பாதையிலிருந்து தப்பிக்க அந்த வழி ஏற்புடையதுதானா என்பதை உறுதி செய்ய முதல்முறையாகப் பயிற்சியின்போது அந்தச் சுரங்கவாயிற்குழி பயன்படுத்தப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம் கூறினார். இரண்டு எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே ரயில் மாட்டிக்கொண்டாலோ அல்லது எம்ஆர்டி நிலையத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டாலோ பயணிகள் தப்பிக்க சுரங்கவாயிற்குழி பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
எம்ஆர்டி நிலையங்களில் அளவுக்கு அதிகமானோர் கூடுவதைத் தவிர்க்கவும் இந்த அணுகுமுறை கையாளப்படும் என்று திரு சிம் கூறினார்.
முதல் பொது அவசரகால தயார்நிலை பயிற்சியில் ஈடுபட்ட 35 மாணவர்கள், ஐந்து ஆசிரியர்கள், செய்தியாளர்கள், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் நேற்று அதிகாலை 1 மணி அளவில் ஓட்டுநரில்லாத, காலி எம்ஆர்டி ரயிலில் ஏறினர்.
அந்த ரயில் திடீரென்று பழுதடைந்ததுபோல பாவனைப் பயிற்சி நடத்தப்பட்டது. சில மீட்டர் தூரம் சென்ற அந்த ரயில் சுரங்கப்
பாதையில் திடீரென்று முடங்கியது. அதில் இருந்த மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
பாவனைப் பயிற்சியின்போது குறைந்த அளவிலான வெளிச்சமே இருந்தது. ரயிலின் குளிர்சாதன வசதியும் நிறுத்தப்பட்டது.
அவசரகாலத்தின்போது 45 நிமிடங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் மின்கலன்களை ரயில்கள் பெற்றிருப்பதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது. ஆங்கிலத்தில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. ரயிலுக்குள் இருக்கும் எல்இடி பலகைகளில் செய்முறை விளக்கங்கள் பதிவிடப்பட்டன.
ரயிலின் முன் பகுதியிலுள்ள கதவு திறக்கப்பட்டதும், பயிற்சியில் ஈடுபட்ட அனைவரும் சுரங்கவாயிற்குழியை நோக்கி ஏறத்தாழ 20 மீட்டர் தூரம் நடந்தனர். திசை வழிகாட்டிச் சின்னங்களைத் தெளிவாக பார்க்க முடிந்ததாகவும் சுரங்கப்பாதையில் நடந்து செல்ல போதுமான வெளிச்சம் இருந்ததாகவும் பயிற்சியில் ஈடுபட்டோர் கூறினர்.
சுரங்கவாயிற்குழி வாயிலாக அவர்கள் எம்ஆர்டி நிலையத்துக்கு சற்று தூரத்தில், மெரினா பே சேண்ட்சுக்கு அருகில் இருக்கும் திறந்தவெளியை அடைந்தனர்.
இத்தகைய அவசரகாலம் இதுவரை ஏற்பட்டதில்லை என்று குறிப்பிட்ட திரு சிம், ஒருவேளை அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நடமாட சிரமப்படுவோரால் சுரங்கவாயிற்குழியில் ஏற முடியாது எனக் கூறினார்.
அத்தகையோரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சுரங்கப்பாதையிலிருந்து வெளியே தூக்கிச் செல்வர் என்றார் அவர்.

